கடல் சீற்றத்தால் பாதிப்பு: தரங்கம்பாடி மீன்பிடி துறைமுக கட்டுமான பகுதியை மீன்வளத்துறை இயக்குனர் ஆய்வு


கடல் சீற்றத்தால் பாதிப்பு: தரங்கம்பாடி மீன்பிடி துறைமுக கட்டுமான பகுதியை மீன்வளத்துறை இயக்குனர் ஆய்வு
x
தினத்தந்தி 23 May 2020 5:47 AM IST (Updated: 23 May 2020 5:47 AM IST)
t-max-icont-min-icon

கடல் சீற்றத்தால் பாதிப்புக்குள்ளான தரங்கம்பாடி மீன்பிடி துறைமுக கட்டுமான பகுதியை மீன்வளத்துறை இயக்குனர் சமீரான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொறையாறு, 

கடல் சீற்றத்தால் பாதிப்புக்குள்ளான தரங்கம்பாடி மீன்பிடி துறைமுக கட்டுமான பகுதியை மீன்வளத்துறை இயக்குனர் சமீரான் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கருங்கல் தடுப்புச்சுவர்

‘உம்பன்’ புயல் எதிரொலியாக, கடந்த ஒரு வாரமாக நாகை மாவட்டம் தரங்கம்பாடி பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக உள்ளது. இதனால் கடலோர கிராமங்களில் கடல்நீர் புகுந்தது. தரங்கம்பாடியில் 24 மீனவ கிராமங்கள் பயன்பெறும் வகையில் ரூ.120 கோடி செலவில் மீன்பிடித்துறைமுகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில் ‘உம்பன்’ புயலால் ஏற்பட்ட கடல் சீற்றத்தால் புதிதாக கட்டப்பட்டு வந்த துறைமுகத்திலும் கடல்நீர் புகுந்தது. மேலும், துறைமுகத்தில் கடலில் அமைக்கப்பட்ட கருங்கல் தடுப்புச்சுவரின் ஒரு பகுதி கடல்நீரில் அடித்து செல்லப்பட்டது. இதுகுறித்து பவுன்ராஜ் எம்.எல்.ஏ., தமிழக முதல்-அமைச்சர் மற்றும் மீன்வளத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.

ஆய்வு

அதனை தொடர்ந்து நேற்று பாதிப்புக்கு உள்ளான மீன் பிடி துறைமுக கட்டுமான பகுதியை மீன்வளத்துறை இயக்குனர் சமீரான் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் பாதிப்புகளை உடனே சரி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பின்னர், கடல் சீற்றத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து மீனவர்களிடம் கேட்டறிந்தார்.

அப்போது தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள், கடல் சீற்ற பாதிப்புகள் குறித்து இயக்குனரிடம் மனு கொடுத்தனர். அதில் மீன்பிடி துறைமுக கட்டுமான பகுதியில் கட்டப்பட்டிருந்த தடுப்புச்சுவரின் தெற்கு பகுதி 800 மீட்டர் நீளத்திற்கும், வடக்கு பகுதி 300 மீட்டர் நீளத்திற்கும் சேதம் அடைந்துள்ளது. தடுப்புச்சுவரின் உயரம் மற்றும் அகலம் குறைவாக இருந்ததே சேதத்திற்கு காரணமாகும். தடுப்புச்சுவரை சீரமைக்கும்போது நீளம் மற்றும் அகலத்தை அதிகரித்தால், எதிர்காலத்தில் இயற்கை சீற்றங்களின்போது பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம். மேலும், தடுப்புச்சுவரின் மீது வாகனங்கள் செல்லும் வகையில் சாலை அமைக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

தடை செய்யப்பட்ட வலை

மேலும் தடை செய்யப்பட்ட இரட்டைமடி மற்றும் சுருக்கு வலை பயன்படுத்துவதை தடுக்க வேண்டும் என்று மீனவர்கள், இயக்குனரிடம் கோரிக்கை விடுத்தனர். அதற்கு பதில் அளித்த இயக்குனர், தமிழக அரசு போலீஸ் உயர் அதிகாரி தலைமையில் 120 கடலோர பாதுகாப்பு போலீசார் உள்ளடக்கிய குழுவை தடை செய்யப்பட்ட வலைகள் பயன்பாட்டை தடுக்க அமைத்துள்ளது. எனவே இதுகுறித்து மீனவர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. மீனவர்களின் மற்ற கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதாக உறுதி அளித்தார். மேலும் கொரோனா ஊரடங்கு காரணமாக இலங்கையில் சிக்கி தவிக்கும் தமிழக மீனவர்களை, விமான போக்குவரத்து தொடங்கியவுடன் தமிழகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Next Story