கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கேட்டு நெல்லையில் நையாண்டி மேளம், நாதஸ்வரம் இசைத்து மனு கொடுக்க வந்த கலைஞர்கள்


கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கேட்டு நெல்லையில் நையாண்டி மேளம், நாதஸ்வரம் இசைத்து மனு கொடுக்க வந்த கலைஞர்கள்
x
தினத்தந்தி 23 May 2020 6:05 AM IST (Updated: 23 May 2020 6:05 AM IST)
t-max-icont-min-icon

கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கேட்டு நெல்லையில் கிராமிய கலைஞர்கள் நையாண்டி மேளம், நாதஸ்வரம் இசைத்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.

நெல்லை, 

கலைநிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கேட்டு நெல்லையில் கிராமிய கலைஞர்கள் நையாண்டி மேளம், நாதஸ்வரம் இசைத்து கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தனர்.

கிராமிய கலைஞர்கள்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதன் காரணமாக அனைத்து கோவில்களிலும் விழாக்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. கிராம கோவில்களில் விழாக்கள் நடக்கும்போது கிராமிய கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் இடம் பெறுவது வழக்கம்.

ஆனால், தற்போது கிராம கோவில்களிலும் திருவிழாக்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளதால் நாட்டுப்புற கலைஞர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள். மேளம், கரகாட்டம், வில்லிசை, தப்பாட்டம், கணியான் கூத்து, ஒயிலாட்டம், மாடு, மயில் ஆட்டம், காவடி ஆட்டம் ஆகிய நிகழ்ச்சிகளை நடத்தி வந்த கலைஞர்கள் தற்போது வருமானம் இன்றி வறுமையில் வாடி வருகின்றனர்.

மனு கொடுக்க வந்தனர்

இந்த நிலையில் நெல்லை கலெக்டர் அலுவலகத்துக்கு கரகாட்டம், கணியான் கூத்து கலைஞர்கள், வில்லிசை கலைஞர்கள் உள்பட பல்வேறு கிராமிய கலைஞர்கள் நேற்று வந்தனர். அவர்கள் கொக்கிரகுளம் ஆற்றுப்பாலம் அருகில் இருந்து தலையில் கரகம் வைத்து, நையாண்டி மேளம், நாதஸ்வரம் இசைத்தவாறு கொக்கிரகுளம் ரோட்டில் அணிவகுத்து சென்றனர்.

கலெக்டர் அலுவலக பிரதான நுழைவு வாசல் முன்பு நின்று சிறிது நேரம் இசைத்தனர். அப்போது அங்கு பாளையங்கோட்டை போலீஸ் உதவி கமிஷனர் பெரியசாமி தலைமையில் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள், இங்கு இசை நிகழ்ச்சி நடத்தக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்தனர். பின்னர் சங்க நிர்வாகிகளை மட்டும் கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று மனு கொடுக்க நடவடிக்கை எடுத்தனர்.

வறுமையில் வாடுகிறோம்

இதையடுத்து தென்மண்டல அனைத்து கலைசங்கங்களின் கூட்டமைப்பு, நெல்லை மாவட்ட கிராமிய கரகாட்ட கலைஞர்கள் முன்னேற்ற சங்கம், அம்பை வட்டார அனைத்து கிராமிய கலைஞர்கள் சங்கம், நெல்லை-தூத்துக்குடி மாவட்ட கணியான் சமுதாய சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் நிர்வாகிகள் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

நெல்லை மாவட்டத்தில் 4 ஆயிரம் கிராமிய கலைஞர்கள் வாழ்ந்து வருகிறோம். கலைநிகழ்ச்சி மூலமாக வரும் வருமானத்தை கொண்டு வாழ்க்கை நடத்தி வருகிறோம். பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் வருமானம் அதிகமாக கிடைக்கும். இதைக்கொண்டுதான் ஆண்டு முழுவதும் வாழ்க்கை நடத்துவோம். தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கால் கலைத்தொழில் செய்ய முடியாமல் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வறுமையில் வாடி வருகிறோம்.

அனுமதிக்க வேண்டும்

எனவே, நெல்லை மாவட்டத்தில் கிராம கோவில்களில் சமூக இடைவெளியை கடைபிடித்து திருவிழா நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். மேளம், கரகாட்டம், வில்லிசை, தப்பாட்டம், கணியான் கூத்து, ஒயிலாட்டம், மாடு, மயில் ஆட்டம், காவடி ஆட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Next Story