செந்நிறத்தில் ஓடிய தாமிரபரணி ஆறு: நெல்லை கலெக்டர், மாநகராட்சி ஆணையாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு
தாமிரபரணி ஆறு செந்நிறமாக ஓடியது தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீசு அனுப்பியது.
நெல்லை,
தாமிரபரணி ஆறு செந்நிறமாக ஓடியது தொடர்பாக நெல்லை மாவட்ட கலெக்டர், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் ஆகியோரிடம் விளக்கம் கேட்டு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீசு அனுப்பியது.
மனித உரிமைகள் ஆணையத்தில் மனு
தூத்துக்குடி மில்லர்புரத்தில் உள்ள எம்பவர் சுற்றுச்சூழல் மற்றும் நுகர்வோர் கல்வி ஆராய்ச்சி மைய செயல் இயக்குனர் சங்கர் சென்னையில் உள்ள மாநில மனித உரிமைகள் ஆணைய நீதிபதி துரை.ஜெயச்சந்திரனுக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
நெல்லை மாவட்டம் பொதிகை மலையில் உற்பத்தியாகி, தூத்துக்குடி மாவட்டத்தில் கடலில் கலக்கும் வற்றாத ஜீவநதியான தாமிரபரணி ஆற்றில் கடந்த சில நாட்களாக தண்ணீர் கலங்கலாக செல்கிறது. மேலும் திடீரென்று தண்ணீர் செந்நிறமாக மாறியதால் பொதுமக்கள் மிகவும் கலக்கம் அடைந்துள்ளனர். தாமிரபரணி ஆற்றில் இருந்து பாசனக்கால்வாய் மூலம் ஆயிரக்கணக்கான எக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற்று, அதன் மூலம் விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது.
உள்ளாட்சிகளின் கழிவுநீர் ஆற்றில் கலப்பதால், தண்ணீர் குடிப்பதற்கு ஏற்றதாக இல்லாமல் உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தாமிரபரணி ஆற்றில் மஞ்சள் நிறத்தில் மாசுபட்ட தண்ணீர் செல்வதால், பொதுமக்கள் இந்த தண்ணீரை குடிநீராக பயன்படுத்த மிகவும் அச்சம் அடைந்துள்ளனர். தாங்கள் இந்த விஷயத்தில் நேரடியாக தலையிட்டு நேரில் ஆய்வு செய்து தகுந்த தீர்ப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
நோட்டீசு
மனுவை பெற்று கொண்ட நீதிபதி ஜெயச்சந்திரன் இதுகுறித்து நெல்லை மாவட்ட கலெக்டர், சென்னை பொதுப்பணிதுறை நீர்வள ஆதார தலைமை பொறியாளர், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் 4 வாரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீசு அனுப்பினார்.
Related Tags :
Next Story