கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த வெளிமாநிலத்தினர் 2 மாதமாக ஊர் திரும்ப முடியாமல் தவிப்பு உதவி தேடி அலையும் பரிதாபம்
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த மேற்கு வங்காள மாநிலத்தினர் ஊரடங்கால் 2 மாதமாக ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள்.
நாகர்கோவில்,
கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த மேற்கு வங்காள மாநிலத்தினர் ஊரடங்கால் 2 மாதமாக ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகிறார்கள். கையில் இருந்த பணமும் கரைந்து போனதால் உதவி தேடி அலையும் பரிதாப நிலை ஏற்பட்டது.
சுற்றுலா பயணிகள்
மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா அருகில் உள்ள கார்தா பகுதியைச் சேர்ந்தவர் சித்தேஷ்வர் சாட்டர்ஜி (வயது 65). இவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 6 பேருடன் கடந்த மார்ச் மாதம் 14-ந் தேதி தமிழக சுற்றுலா தலங்களை பார்ப்பதற்காக புறப்பட்டு வந்தார்.
6 பேரில் 3 பெண்கள், 2 ஆண்கள், 8 வயது சிறுவன். வழியில் பல்வேறு இடங்களை பார்த்து விட்டு அந்த மாதம் 22-ந் தேதி கன்னியாகுமரிக்கு ரெயில் மூலம் வந்து சேர்ந்தனர். அங்கு ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்து கன்னியாகுமரி பகுதியை சுற்றிப்பார்த்தனர்.
ஊரடங்கால் முடங்கினர்
இந்த நிலையில் தான் மார்ச் மாதம் 25-ந் தேதி கொரோனா வைரஸ் வேகமாக பரவியதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் பஸ், ரெயில், விமான சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்டன. எனவே சுற்றுலா வந்த சித்தேஷ்வர் சாட்டர்ஜி குடும்பத்தினர் தங்களது சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் லாட்ஜிலேயே முடங்கினர்.
மேலும் ஊரடங்கு அமல்படுத்தியதை தொடர்ந்து தங்கும் விடுதிகளும் மூடப்பட்டன. இதனால் லாட்ஜ் ஹாலில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அதற்கும், உணவுக்கும் அவர்கள் தொடர்ந்து பணம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுபற்றிய தகவலை அறிந்த மாவட்ட நிர்வாகமும், போலீசாரும் இந்த குடும்பத்தினர் பாதுகாப்பாக தங்குவதற்கு போலீஸ் நிலையம் அருகே ஏற்பாடு செய்து கொடுத்தது. ஆனாலும் உணவு மற்றும் தங்குமிட செலவாக மட்டுமே அவர்கள் 7 ஆயிரம் செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விழி பிதுங்கினர்
இதற்கிடையே கையில் இருந்த பணமும் கரைய தொடங்கியது. இனிமேல் செலவுக்கு என்ன செய்வது? என தெரியாமலும், ஊருக்கு எப்படி செல்வது? என தெரியாமலும் விழிபிதுங்கி நின்றனர். மேலும் தாங்கள் சொந்த ஊர் செல்ல விரும்புவதாக மாவட்ட நிர்வாகத்துக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தனர்.
இந்தநிலையில் வடமாநில தொழிலாளர்களுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு ரெயில் நாகர்கோவிலில் இருந்து புறப்பட்டுச் செல்லும் தகவல் அவர்களுக்கு கிடைத்தது. உடனே கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு ஆட்டோ மூலம் வந்து சேர்ந்தனர்.
உதவிக்கு...
பின்னர் நேற்று பிற்பகலில் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு புறப்பட்டுச் சென்ற ரெயிலில் ஏறிச்செல்ல முயன்றனர். அதிகாரிகள் அவர்களை பிடித்து விசாரித்தபோது மேற்கண்ட தகவல்களை தெரிவித்தனர். தன்னிடம் கொஞ்சமாக இருக்கும் பணத்தைக் கொண்டு உணவுச்செலவை சமாளித்துக் கொள்கிறேன். எப்படியாவது தங்களை கொல்கத்தாவுக்கு அனுப்பி வையுங்கள் என்று அதிகாரிகளிடம் அவர்கள் கெஞ்சினர். இது பரிதாபத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதிகாரிகள் இந்த ரெயில் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு செல்கிறது. கொல்கத்தாவுக்கு ரெயில் புறப்பட்டு செல்லும்போது உங்களை ஏற்றி அனுப்பி வைக்கிறோம் என கூறி அவர்களை அனுப்பி வைத்தனர்.
இதனால் இனிமேல் எங்கு போய் தங்குவது? யாரிடம் உதவி கேட்பது? எனத் தெரியாமல் சித்தேஷ்வர் சாட்டர்ஜியும் அவருடைய குடும்பத்தினரும் ரெயில் நிலையத்தையே சுற்றி, சுற்றி வந்தனர். கையில் இருக்கிற கொஞ்ச பணத்திலும் தங்குவதற்கு அறை கிடைக்குமா? என்றும் அவர் தேடி அலைந்தார்.
பரிதாபத்தை ஏற்படுத்தியது
இப்படி அவர் பரிதவிக்கும் நிலையை பார்த்த ரெயில் நிலைய ஆட்டோ டிரைவர்கள் சிலர் வருவாய்த்துறை அதிகாரி செல்போனை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தனர். அந்த அதிகாரி சித்தேஷ்வர் சாட்டர்ஜி தங்கியிருந்த கன்னியாகுமரியிலேயே தொடர்ந்து தங்கியிருக்குமாறும், ஏற்கனவே இவர் ஆன்லைனில் பதிவு செய்திருப்பதால் இன்னும் ஒரு சில தினங்களில் மேற்கு வங்க மாநிலத்துக்கு ரெயில் புறப்பட்டு செல்லும்போது இவரையும், குடும்பத்தினரையும் அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்தார். அதை நம்பி சித்தேஷ்வர் சாட்டர்ஜி மீண்டும் கன்னியாகுமரியில் தாங்கள் தங்கியிருந்த இடத்துக்கு குடும்பத்தினரை அழைத்துச் சென்றார். சுற்றுலா வந்த இடத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மேற்கு வங்காள மாநில குடும்பத்தை சேர்ந்தவர்கள், 2 மாதமாக ஊர் திரும்ப முடியாமல் தவித்து வரும் இந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story