மோகனூரில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்


மோகனூரில் தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம்
x
தினத்தந்தி 23 May 2020 6:58 AM IST (Updated: 23 May 2020 6:58 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள் என மொத்தம் 220 பேருக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.

மோகனூர், 

 மோகனூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 25 ஊராட்சிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டு வரும் தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள் என மொத்தம் 220 பேருக்கு மோகனூர் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. 

மாவட்ட கலெக்டர் அறிவுரையின் பேரில் நடைபெற்ற இந்த முகாமை, மோகனூர் ஒன்றியக்குழு தலைவர் சரஸ்வதி கருமண்ணன் தொடங்கி வைத்தார். ராசிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணியன் வரவேற்றார். 

முகாமில், வட்டார வளர்ச்சி அலுவலர் குணாளன், வட்டார சுகாதார ஆய்வாளர் செல்வராஜா ஆகியோர் பேசும்போது, தூய்மை பணியில் ஈடுபடும் பணியாளர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் பற்றியும், சாப்பிட வேண்டிய உணவுகள், சுத்தம் சுகாதாரம் மற்றும் காசநோய் தடுப்பு பற்றியும் விளக்கி கூறினார்கள். தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு ரத்த அழுத்தம், சிறுநீர், கண், சளி என பல்வேறு பரிசோதனை செய்யப்பட்டது.  

நிகழ்ச்சியில், டாக்டர்கள் ஜனனி, நித்யா, ஹேமாவதி ஆகியோர் பரிசோதனை செய்து தூய்மை பணியாளர்களுக்கு ஆலோசனை கூறினார்கள். இதில் மண்டல அலுவலர் லீலாகுமார், சுகாதார ஆய்வாளர்கள் சங்கர், சந்திரசேகரன், கோபிநாதன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story