நாமக்கல்லில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்லில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 55 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
நாமக்கல்,
நாமக்கல்லில் அரசு போக்குவரத்து பணிமனை முன்பு போக்குவரத்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. கிளை செயலாளர்கள் பிரகாஷம், செல்வம் ஆகியோர் தலைமை தாங்கினர். சி.ஐ.டி.யு. கிளை செயலாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார்.
வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக அதிகரிப்பதை கைவிட கோரியும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நாமக்கல் டவுன் காமராஜ் நகர் பகுதியில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி. அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. நிர்வாகி முருகராஜ் தலைமையிலும், நல்லிப்பாளையம் போலீஸ் நிலையம் அருகே உள்ள ஒருங்கிணைந்த தொழிலாளர் துறை அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொதுச்செயலாளர் தனசேகரன் தலைமையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.
இதற்கிடையே நாமக்கல் காமராஜ் நகரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படவில்லை என புகார் எழுந்தது. தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்திய நாமக்கல் போலீசார் அரசு உத்தரவை மீறியதோடு, சமூக இடைவெளியை பின்பற்றாததாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
அதேபோல் அஞ்சல் நிலையம் அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அஞ்சல் ஊழியர்கள் 20 பேர் மீதும், அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 25 பேர் மீதும் என மொத்தம் 55 பேர் மீது நாமக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் சார்பில் ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நகர செயலாளர் மணிமாறன் தலைமை தாங்கினார். இதில் பலர் கலந்து கொண்டு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டுக்குழு சார்பாக மத்திய அரசின் தொழிலாளர் நல விரோத போக்கை எதிர்த்தும், மின்வாரியத்தை தனியார்மயம் ஆக்குவதை கைவிடக்கோரியும் ராசிபுரம் மின்வாரிய அலுவலகம் முன்பு ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்செங்கோடு நகர இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் மாநில கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் மணிவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல திருச்செங்கோடு அண்ணா சிலை முன்பு ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் மாவட்ட தலைவர் ஜெயராமன் மற்றும் சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் ராயப்பன் ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதேபோல திருச்செங்கோடு லாரி நிலையம், டெம்போ நிலையம், மரக்கடை கிளை, சந்தைப்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
Related Tags :
Next Story