போலி அனுமதி சீட்டு மூலம் மும்பையில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த 2 பஸ்கள் பறிமுதல் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது


போலி அனுமதி சீட்டு மூலம்  மும்பையில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த 2 பஸ்கள் பறிமுதல்  உரிமையாளர் உள்பட 4 பேர் கைது
x
தினத்தந்தி 23 May 2020 2:16 AM GMT (Updated: 23 May 2020 2:16 AM GMT)

போலியான அனுமதிச்சீட்டு மூலம் மும்பையில் இருந்து பயணிகளை ஏற்றி வந்த 2 தனியார் சொகுசு பஸ்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிமையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆண்டிப்பட்டி,

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே கணவாய் மலைப்பகுதியில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து வாகன தணிக்கை செய்து வருகின்றனர். நேற்று மாலையில் இங்கு போலீசார் வாகன தணிக்கை செய்த போது 2 தனியார் சொகுசு பஸ்கள் வந்தன. அவற்றில் மொத்தம் 60 பயணிகள் இருந்தனர்.

அவர்கள் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர்கள். மராட்டிய மாநிலம் மும்பை அருகில் உள்ள தாராவி பகுதியில் வசித்து வந்த நிலையில் ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் சொந்த ஊருக்கு 2 பஸ்களில் வந்துள்ளனர். அவர்கள் பயணம் செய்த 2 பஸ்களுக்கும் வழங்கப்பட்ட வாகன அனுமதிச்சீட்டு மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து இணையதளம் மூலம் விண்ணப்பித்து பெறப்பட்டதாக கூறப்பட்ட 2 பஸ்களுக்குமான அனுமதிச்சீட்டுகளை போலீசார் ஆய்வுக்கு உட்படுத்தினர். அதில் அவை போலியானது என்று தெரியவந்தது.

4 பேர் கைது

போலியான வாகன அனுமதிச்சீட்டு மூலம் தேனியில் இருந்து மராட்டியம் சென்று பயணிகளை ஏற்றிக் கொண்டு திரும்பி வந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த பஸ்சில் வந்த 60 பேரையும் ஆண்டிப்பட்டியில் உள்ள தனிமைப்படுத்தும் முகாமில் போலீசார் தங்க வைத்தனர். அங்கு அவர்கள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.

2 பஸ்களையும் ஆண்டிப்பட்டி போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து பஸ்களின் உரிமையாளரான தேனி அருகே உள்ள வளையபட்டியை சேர்ந்த சண்முகநாதன், பஸ் நிறுவனத்தின் மேலாளர் செந்தில்குமார், டிரைவர்கள் ராமையா, பிச்சைமணி ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, இந்த பஸ் நிறுவனத்துக்கு சொந்தமான பஸ்கள் ஏற்கனவே இதேபோன்று போலி அனுமதிச்சீட்டு மூலம் மராட்டியம் சென்று பயணிகளை ஏற்றிக் கொண்டு தேனி வந்தது தெரியவந்துள்ளது.

Next Story