குமரியில் ரூ.3¾ கோடியில் குடிமராமத்து பணிகள் தளவாய் சுந்தரம் தகவல்
அனந்தகுளத்தில் குடி மராமத்து பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. பணிகளை தொடங்கி வைத்த தளவாய்சுந்தரம், குமரி மாவட்டத்தில் ரூ.3¾ கோடியில் குடி மராமத்து பணிகள் நடைபெற இருப்பதாக கூறினார்.
நாகர்கோவில்,
அனந்தகுளத்தில் குடி மராமத்து பணிகள் தொடக்க நிகழ்ச்சி நடந்தது. பணிகளை தொடங்கி வைத்த தளவாய்சுந்தரம், குமரி மாவட்டத்தில் ரூ.3¾ கோடியில் குடி மராமத்து பணிகள் நடைபெற இருப்பதாக கூறினார்.
குடிமராமத்துப் பணி
முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவுப்படி குமரி மாவட்டம் ஆலம்பாறை அனந்தன்குளத்தில் ரூ.24 லட்சத்தில் குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட்டது. இதன் தொடக்க நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.
கலெக்டர் பிரசாந்த் வடநேரே தலைமை தாங்கினார். தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் கலந்து கொண்டு குடிமராமத்து பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
அதிக நீர் இருப்பு
மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதா, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களை கிராமப்புறங்களில் ஏற்படுத்தி குறைந்த வட்டியில் கடன் உதவிகள் வழங்கினார். அதனால்தான் விவசாயிகளின் வாழ்க்கைத்தரம் உயர்ந்தது.
ஜெயலலிதா வழியில் செயல்படும் தமிழக முதல்-அமைச்சர், விவசாயிகளுக்காக நீர் ஆதாரங்களை மேம்படுத்த குடிமராமத்து திட்டத்தினை ஏற்படுத்தினார். அந்த திட்டம் மூலம் தமிழகத்தில் உள்ள குளங்கள் தூர்வாரப்பட்டு அதிக தண்ணீர் சேமிக்கப்படுகிறது. இதன்மூலம் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் நிலத்தடிநீர் உயர்ந்து மக்களுக்கு தேவையான குடிநீர் ஆதாரங்களிலும் நீர்இருப்பு அதிகமாக உள்ளது.
10 குளங்கள், 10 கால்வாய்கள்
தற்போது மழைக்காலம் தொடங்கி குமரி மாவட்டத்தில் விவசாய பணிகள் ஆரம்பிக்கும் நிலையில் உள்ளது. நமது மாவட்டத்துக்கு பொதுப்பணித்துறை (நீர்வள ஆதார அமைப்பு) மூலம் குடிமராமத்து பணிகளுக்காக கடந்த 2018-ம் ஆண்டு ரூ.3 கோடியே 36 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 39 குளங்கள் குடிமராமத்து பணிகள் நடந்துள்ளது. 2019-ம் ஆண்டு ரூ.2 கோடியே 15 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு 16 குளங்களில் சீரமைப்பு பணிகள் நடந்துள்ளது.
நடப்பு ஆண்டில் (2020-2021) குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.3 கோடியே 83 லட்சத்தில் 10 குளங்கள், 10 கால்வாய்கள் சீரமைக்கும் பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு பணிகள் நடைபெற உள்ளது. நேற்று நடந்த நிகழ்ச்சியின் மூலம் ரூ.24 லட்சத்தில் அனந்தன் குளம் கால்வாய் குடிமராமத்து பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டிய கரையில் மொத்தமுள்ள 10 மதகுகளில் உள்ள பழுதுகள் சரிசெய்யப்பட உள்ளது.
பாசன வசதி
இதில் 300 மீட்டர் நீளமுள்ள கால்வாயின் கரை சரிசெய்யப்பட்டு, 130 மீட்டர் நீளம் தடுப்புசுவர் பழுதுபார்க்கப்பட உள்ளது. இந்த கால்வாயின் மொத்த ஆயக்கட்டு பகுதிகளான 96 எக்டேர் நிலம் பாசன வசதி பெறும். இவ்வாறு தளவாய்சுந்தரம் கூறினார்.
நிகழ்ச்சியில் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ., மாவட்ட ஆவின் தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட அரசு ரப்பர் வளர்ப்போர் கூட்டுறவு விற்பனை சங்கத்தலைவர் ஜாண்தங்கம், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மெர்லியன்று தாஸ், தமிழ்நாடு மாநில மீன்வள கூட்டுறவு இணைய தலைவர் சேவியர் மனோகரன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் கிருஷ்ணகுமார், அறங்காவலர் குழு உறுப்பினர் ஜெயச்சந்திரன், செயற்பொறியாளர் (நீர்வள ஆதார அமைப்பு) சுகுமாரன், உதவி செயற்பெரியாளர்கள் ரமேஷ்ராஜா, அருள்சன்பிரைட் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
கோவில் பணியாளர்கள்
இதேபோல் முப்பந்தல் இசக்கியம்மன் கோவில் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் 15 பேருக்கு நிவாரண பொருட்களான அரிசி, காய்கறி மற்றும் பருப்பு ஆகியவற்றை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய் சுந்தரம் வழங்கினார்.
Related Tags :
Next Story