தனியார் மயமாகும் திருச்சி விமான நிலையம் மத்திய அரசு கைவிட தொழிற்சங்கங்கள் கோரிக்கை


தனியார் மயமாகும் திருச்சி விமான நிலையம் மத்திய அரசு கைவிட தொழிற்சங்கங்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 23 May 2020 8:20 AM IST (Updated: 23 May 2020 8:20 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

செம்பட்டு, 

திருச்சி விமான நிலையத்தை தனியார் மயமாக்குவதை மத்திய அரசு கைவிட தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது

திருச்சி விமான நிலையம், 2-ம் உலகப்போரின் போது ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்டது. பிரிட்டி‌‌ஷ் விமானப்படையால் பயன்படுத்தப்பட்டது. போர் விமானங்கள், இந்த விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு பழுது மற்றும் பராமரிப்புக்காக 2 கி.மீட்டர் தூரத்தில் உள்ள பொன்மலையில் உள்ள ஒரு பட்டறைக்கு கொண்டு செல்லப்பட்டன. உலகப் போர் முடிந்த பின்பு விமான நிலையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட்டது.

இங்கிருந்து 1936-ம் ஆண்டில், இந்தியாவிலிருந்து கொழும்புக்கு, முதல் விமான அஞ்சல் டாட்டாவின் நல்லெண்ண விமானம் மூலம் எடுத்துச் செல்லப்பட்டது. 1941-ம் ஆண்டில் இருந்து ஐதராபாத், சென்னை மற்றும் மும்பை, திருவனந்தபுரத்திற்கு வணிக விமானங்கள் இயக்கப்பட்டன. 1947-ம் ஆண்டு கொழும்பு-திருச்சி இடையே விமானங்களை இயக்க அனுமதிக்கப்பட்டன.

சர்வதேச விமான நிலைய அந்தஸ்து

2012-ம் ஆண்டு வரை சுங்க விமான நிலையமாக இருந்த திருச்சி விமான நிலையத்திற்கு சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம், சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கியது. அதனைத்தொடர்ந்து துபாய், மலேசியா, சிங்கப்பூர், சார்ஜா, இலங்கை உள்ளிட்ட வெளி நாடுகளுக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. மேலும் உள்நாட்டு விமான சேவைகளாக ஹைதராபாத், பெங்களூரு, சென்னை, கொச்சி உள்பட பல்வேறு நகரங்களுக்கு விமான சேவைகள் இயக்கப்பட்டு வருகிறது.

மெட்ரோ அல்லாத விமான நிலையங்களில் அதிக வருவாய் ஈட்டும் விமான நிலையமாக திருச்சி விமான நிலையம் இருந்து வருகிறது. மேலும் சரக்குகள் கையாள்வதிலும் கடந்த ஆண்டு ரூ.2 கோடி லாபம் ஈட்டி உள்ளது. தற்போது ரூ.900 கோடியில் புதிய முனையம் அமைக்கப்பட்டு விமான நிலையத்தின் தரம் உயர்த்தப்பட இருக்கும் நேரத்தில் இதனை தனியார் மயமாக்க மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

போராட்டம்

இதுகுறித்து திருச்சி விமான நிலைய அனைத்து தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் யுவராஜ் கூறுகையில், திருச்சி விமான நிலையத்தை தனியார் வசம் ஒப்படைக்க கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து தொழிற்சங்கங்களும் போராட்டங்கள் நடத்தின. தற்போது மீண்டும், விமான நிலையத்தை தனியார் மயமாக்க மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தொழிற்சங்க குழு கூடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடும். மேலும் மெட்ரோ அல்லாத விமான நிலையங்களில் திருச்சி விமான நிலையமானது அதிக வருவாய் ஈட்டி வரும் நிலையில் இதனை தனியார்மயம் ஆக்குவதற்கான காரணம் தெரியவில்லை. இதனை கண்டிப் பதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story