பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதற்கு எதிர்ப்பு: அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மாவட்டம் முழுவதும் 152 இடங்களில் நடந்தது


பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதற்கு எதிர்ப்பு:  அனைத்து தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்  மாவட்டம் முழுவதும் 152 இடங்களில் நடந்தது
x
தினத்தந்தி 23 May 2020 8:34 AM IST (Updated: 23 May 2020 8:34 AM IST)
t-max-icont-min-icon

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து தொழிற்சங்கத்தினர் சார்பில் கருப்பு பட்டை அணிந்து மாவட்டம் முழுவதும் 152 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர், 

தொழிலாளர்களின் 8 மணி நேர வேலைநேரத்தை 12 மணி நேரமாக உயர்த்துவதை கைவிட வேண்டும். தொழிலாளர் சட்டத்தை திருத்தம் செய்து ஒப்புதல் பெற ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளிக்கக்கூடாது. நலவாரியங்களில் பதிவு செய்தவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்யக்கூடாது. பஞ்சப்படியை ஓராண்டுக்கு நிறுத்தம் செய்ததை மறுபரிசீலனை செய்ய வேண்டும். புலம்பெயர்ந்த தொழிலாளர்களை போலீசார் தாக்குவதை கைவிட்டு அவர்களை அரசு செலவில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கம் சார்பில் திருப்பூர் மாவட்டம் முழுவதும் 152 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு முன்னாள் எம்.எல்.ஏ. தங்கவேல் தலைமை தாங்கினார். இதுபோல் கலெக்டர் அலுவலகம் முன்பு, மாநகராட்சி அலுவலகம் முன்பு, மாநகராட்சியின் 4 மண்டல அலுவலகம் முன்பு, தபால் நிலையம், தொழிலாளர் நல அலுவலகம், குமரன் ரோடு உள்பட மாநகரில் 52 இடங்களில் நடைபெற்றது.

தொழிற்சங்கத்தினர்

இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், ஏ.ஐ.டி.யு.சி. பொதுச்செயலாளர் சேகர், இந்திய கம்யூனிஸ்டு கட்சிமாவட்ட செயலாளர் ரவி, சி.ஐ.டி.யு. சார்பில் ரங்கராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் முத்துக்கண்ணன், எல்.பி.எப். சார்பில் சிதம்பரசாமி, ஐ.என்.டி.யு.சி. சார்பில் சிவசாமி, எச்.எம்.எஸ்.சார்பில் முத்துசாமி, எம்.எல்.எப். சார்பில் மனோகர் உள்பட அந்தந்த பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கருப்பு பட்டை, கருப்பு சட்டை அணிந்தும் கலந்து கொண்டனர்.

அனுப்பர்பாளையம்

இதே போல் அனுப்பர்பாளையம் புதூர், பிச்சம்பாளையம் புதூர், பெரியார் காலனி ,காந்திநகர், ஆகிய 4 இடங்களிலும், திருமுருகன்பூண்டி போலீஸ் எல்லைக்குட்பட்ட திருமுருகன்பூண்டி,

அணைபுதூர், அம்மாபாளையம், வஞ்சிபாளையம், 15 வேலம்பாளையம், சாமுண்டிபுரம், ஆத்துப்பாளையம், ஆகிய இடங்களிலும் அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் கொடிகள் ஏந்தியும், கோஷம் எழுப்பியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பல்லடம்

பல்லடத்தில் பல்வேறு பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பல்லடம் பனப்பாளையம் சோதனைச்சாவடி அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. நகர பொறுப்பாளர் ராஜேந்திரகுமார், முன்னாள் நகராட்சி தலைவர் பி.ஏ.சேகர், நகர காங்கிரஸ் தலைவர் ஈஸ்வரமூர்த்தி, தி.மு.க. நிர்வாகிகள் ஜெகதீஷ், ராஜசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பல்லடம் அஞ்சலக வீதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்டகுழு உறுப்பினர் சத்தியமூர்த்தி, தி.மு.க. நிர்வாகிகள் ரத்தினசாமி, கவுஷ்பாசா மற்றும் பலர் கலந்து கொண்டனர். பல்லடம் வடுகபாளையம் பகுதியில் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் சண்முகசுந்தரம், வார்டு பொறுப்பாளர் வேலுமணி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க கூட்டணி தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.

மங்கலம் நால்ரோடு பகுதியிலும் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அதன்படி திருப்பூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 152 இடங்களில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story