திருச்சியில் வாலிபர் மர்ம சாவு தகனம் செய்ய கொண்டு சென்ற உடலை மீட்ட போலீசார்


திருச்சியில் வாலிபர் மர்ம சாவு தகனம் செய்ய கொண்டு சென்ற உடலை மீட்ட போலீசார்
x
தினத்தந்தி 23 May 2020 3:13 AM GMT (Updated: 23 May 2020 3:13 AM GMT)

திருச்சியில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை தகனம் செய்ய கொண்டு சென்ற போது போலீசார் மீட்டனர்.

திருச்சி, 

திருச்சியில் வாலிபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்தார். அவரது உடலை தகனம் செய்ய கொண்டு சென்ற போது போலீசார் மீட்டனர்.

மர்ம சாவு

திருச்சி பாலக்கரை எடத்தெரு பகுதியை சேர்ந்த வெங்கடாசலம் மகன் கண்ணன்(வயது 26). இவர் நேற்று பகல் வீட்டில் படுக்கையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப்பார்த்து அவரது குடும்பத்தினர் கண்ணீர்விட்டு கதறி அழுதனர். பின்னர் அவரது உடலை தகனம் செய்ய ஆம்புலன்ஸ் மூலம் ஓயாமரி சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். இதற்கிடையே பாலக்கரை போலீஸ் நிலையத்தை தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், கண்ணன் சாவில் மர்மம் இருப்பதாக கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.

உடனே பாலக்கரை போலீசார், சம்பவம் நடந்த வீட்டுக்கு விரைந்து சென்று குடும்பத்தினரிடம் விசாரித்தனர். அப்போது வாலிபரின் உடலை ஓயாமரி சுடுகாட்டுக்கு கொண்டு சென்றது தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு சென்று உடலை தகனம் செய்வதற்கு முன்பாக மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விசாரணை

மேலும், இது குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், கண்ணன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததும், அதற்காக மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததும் தெரிய வந்தது. இதனால், கண்ணன் உடல் நலக்குறைவு காரணமாக இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபிறகு தான் கண்ணன் எவ்வாறு இறந்தார் என்பது குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வாய்க்காலில் ஆண் பிணம்

* திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கட்டிட தொழிலாளி மரியஜோசப்(35) பிணமாக மிதந்தார். அவரது பிணத்தை அரசு மருத்துவமனை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

* மணப்பாறையை அடுத்த விடத்திலாம்பட்டி பகுதியில் 40 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்த நாயை மணப்பாறை தீயணைப்பு துறை வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

கல்லூரி மாணவர் மீது தாக்குதல்

* திருச்சி கே.கே.நகர் சேஷசாயி நகரை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பரத்தை(23) குடிபோதையில் தகராறு செய்து தாக்கியதாக இந்திரா நகரை சேர்ந்த பார்த்திபன் என்பவரை கே.கே.நகர் போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

* ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்பட 14 மாவட்டங்களில் பணியாற்றி வந்த 413 பேர், மதுரை மாவட்டத்தில் பணியாற்றி வந்த 360 பேர் என 773 பேர் சிறப்பு ரெயில் மூலம் ராஜஸ்தான் அனுப்பி வைக்கப்பட்டனர்.

டிராக்டர் கவிழ்ந்து டிரைவர் சாவு

* தா.பேட்டை அருகே மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் உள்ள செங்கல்சூளை ஒன்றில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முருகன் (33) டிராக்டர் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம், மேட்டுப்பாளையம் செல்லும் சாலையின் வளைவில் டிராக்டரை திருப்பிய போது சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பயிற்சி விமானம்

* அரக்கோணத்தில் இருந்து பயிற்சி விமானம் ஒன்று நேற்று காலை 10.30 மணி அளவில் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. பின்னர் இங்கிருந்து காலை 10-50 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் நோக்கி சென்றது. இந்த விமானம் ராமேசுவரத்திலிருந்து நேரடியாக அரக்கோணம் சென்றுவிடும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

* திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகர் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் அந்த பகுதியில் இனிப்பு கடை நடத்தி வந்தார். இவருக்கும், அவரது மனைவிக்கும் குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இதனால், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பிரபு உருக்கமான கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Next Story