திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் தடுப்புகள் மாற்றியமைப்பு பஸ்கள் நின்று செல்ல கட்டங்கள் வரையப்பட்டன
திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் உள்ள தடுப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. அதுபோல் பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி செல்ல வசதியாக ரோட்டில் கட்டங்கள் வரையப்பட்டுள்ளன.
திருப்பூர்,
கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு வருகிற 31-ந் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இருப்பினும் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதுவரை சாலைகளில் வாகன போக்குவரத்து குறைந்து இருந்த நிலை மாறி தற்போது திருப்பூர் மாநகர சாலைகளில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. பஸ் போக்குவரத்து இதுவரை தொடங்கப்படவில்லை. இருப்பினும் சாலைகளில் வாகன நெரிசல் குறைந்தபாடில்லை.
இந்த நிலையில் திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பகுதியில் பி.என்.ரோட்டில் இருந்து அவினாசி ரோடு செல்லும் வாகனங்கள் ரவுண்டானாவை சுற்றி செல்வதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டு இருந்தது. தற்போது ரவுண்டானாவுக்கு முன்பு உள்ள தடுப்புகளை அகற்றி இருசக்கர வாகனங்கள் மற்றும் கார், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் அவினாசி ரோடு செல்லும் வகையில் வாகன தடுப்புகள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. ரவுண்டானா சிக்னல் பகுதியில் வாகன நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் இந்த தடுப்புகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
பஸ்களை நிறுத்த கட்டம்
அதுபோல் அவினாசி, கோவை மார்க்கமாக செல்லும் பஸ்கள் புஷ்பா பஸ் நிறுத்தம் பகுதியில் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி சென்று வந்தது. நடுரோட்டில் பஸ்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்குவதால் விபத்து ஏற்பட்டு வந்தது. தற்போது பஸ் நிறுத்தம் பகுதியில் ரோட்டின் நடுவே இரும்பு தடுப்புகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளன. பஸ்களை நிறுத்தி செல்வதற்கு வசதியாக ரோட்டின் ஒரு பகுதியில் 5 கட்டங்கள் வரையப்பட்டு அதற்குள் பஸ்களை நிறுத்தி செல்ல போக்குவரத்து போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர். பஸ்கள் மட்டும் செல்ல வேண்டும் என்று ஆங்கிலத்தில் ரோட்டில் எழுதி வைக்கப்பட்டுள்ளன. மற்ற இருசக்கர, நான்கு சக்கர வகனங்கள் அனைத்தும் மற்றொரு ரோடு வழியாக செல்லவும் வசதி செய்யப்பட்டுள்ளது. அரசு பஸ்கள் விரைவில் இயக்கப்பட உள்ள நிலையில் வடக்கு போக்குவரத்து போலீசார் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளனர்.
Related Tags :
Next Story