குஜராத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் தமிழகத்தை சேர்ந்த 238 பேர் திருச்சி வந்தனர் 6 பஸ்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு
குஜராத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் தமிழக தொழிலாளர்கள் 238 பேர் திருச்சி வந்தனர். அவர்கள், 6 பஸ்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
திருச்சி,
குஜராத்தில் இருந்து சிறப்பு ரெயில் மூலம் தமிழக தொழிலாளர்கள் 238 பேர் திருச்சி வந்தனர். அவர்கள், 6 பஸ்களில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சிறப்பு ரெயில்
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் புலம் பெயர்ந்து வேலை செய்து வந்த தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் அந்தந்த மாநிலங்களில் அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்துக்கு சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று மத்திய-மாநில அரசுகள் அறிவித்து உள்ளன.
அதன்படி, குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் பணிபுரிந்து வந்த திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர் உள்பட 10 மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் 238 பேர் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து இருந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, அவர்கள் அனைவரும் ஆமதாபாத்தில் இருந்து நெல்லை வரை செல்லும் சிறப்பு ரெயில் மூலம் நேற்று காலை திருச்சி வந்தனர்.
6 பஸ்கள் மூலம் அனுப்பி வைப்பு
இவர்கள் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கியதும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அந்தந்த மாவட்டங்களுக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் 6 சிறப்பு பஸ்கள் மூலம் சமூக இடைவெளியை கடைபிடித்து அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு சென்றதும், கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என பரிசோதிக்கப்படுவார்கள்.
அவர்களில், திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 43 பேர் சேதுராப்பட்டியில் உள்ள அரசு தொழில்நுட்பக்கல்லூரியில் அமைக்கப்பட்ட கண்காணிப்பு முகாமில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முன்னதாக ரெயிலில் வந்த தொழிலாளர்களை பைனாகுலர் மூலம் போலீசார் கண்காணித்தனர். தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அவர்களுக்கு தண்ணீரும், உணவும் வழங்கப்பட்டது. அப்போது வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர்(பொது) வடிவேல்பிரபு, அரசு போக்குவரத்துக்கழக பொதுமேலாளர் சத்தியமூர்த்தி, தேர்தல் தாசில்தார் முத்துசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story