10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்


10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணியாளர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்
x
தினத்தந்தி 23 May 2020 9:31 AM IST (Updated: 23 May 2020 9:31 AM IST)
t-max-icont-min-icon

10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடத்தினர்.

விழுப்புரம், 

 அகவிலைப்படி ரத்து, சரண்டர் ரத்து, வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக்கு குறைப்பு ஆகிய அரசு பணியாளர்களின் உரிமை பறிப்பு நடவடிக்கைகள் திரும்ப பெறப்பட வேண்டும், 8 மணி நேர வேலை எனும் போராடி பெற்ற உரிமையை 12 மணி நேரமாக அதிகரிப்பதை கைவிட வேண்டும், பொது முடக்க காலத்தில் பணியாளர்கள், தொழிலாளர்களுக்கு முழு ஊதியம் வழங்கப்பட வேண்டும், கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்துத்துறை பணியாளர்களுக்கும் சிறப்பு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்பட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மாநிலம் தழுவிய அளவில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் சார்பில் கருப்பு பட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

அந்த வகையில் விழுப்புரம் மாவட்டத்திலும் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தினர், கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு பட்டை அணிந்தபடி பணியில் ஈடுபட்டதோடு அரசு அலுவலகங்கள் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

விழுப்புரத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் ராம்குமார், செயலாளர் அய்யனார், பொருளாளர் குமரவேல், துணைத்தலைவர் நடராஜன், இணைச்செயலாளர் டேவிட் குணசீலன், மாநில துணைத்தலைவர் கவிஞர் சிங்காரம், முன்னாள் மாநில துணை பொதுச்செயலாளர் அருணகிரி, முன்னாள் மாநில பிரசார செயலாளர் சிவகுரு, தமிழ்நாடு பல்நோக்கு பணியாளர் சங்க மாநில பொருளாளர் சதீஷ், மாவட்ட அமைப்பு செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.  

திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராம்குமார் தலைமையில் கருப்பு பட்டை அணிந்து போராட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சி ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் டேவிட் குணசீலன், மாவட்ட இணை செயலாளர்கள் சவுந்தரபாண்டியன், குமரகுரு, குமார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் முபாரக் அலிபேக், அலுவலக மேலாளர்கள் பாலச்சந்தர், சையது, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடாசலம், பாண்டியன், நாகராஜன், முல்லை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story