மாவட்ட செய்திகள்

மதுரை கைதி மூலம் தேனி சிறைக்குள் புகுந்த கொரோனா + "||" + Corona enters the Theni prison by a Madurai prisoner

மதுரை கைதி மூலம் தேனி சிறைக்குள் புகுந்த கொரோனா

மதுரை கைதி மூலம் தேனி சிறைக்குள் புகுந்த கொரோனா
மதுரை கைதி மூலம் தேனி சிறைக்குள் கொரோனா புகுந்ததால் போலீசார், சிறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
மதுரை, 

மதுரை திடீர்நகர் பகுதியில் நடந்த இருதரப்பினர் மோதலில் வாலிபர்கள் சிலர் மோதிக்கொண்டனர். இது குறித்த புகாரின் பேரில் திடீர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து இரு தரப்பை சேர்ந்த 12 பேரை கைது செய்தனர்.

அவர்கள் அனைவரையும் திடீர் நகர் போலீஸ் நிலையத்தில் விசாரித்து ஒரு தரப்பினரை விருதுநகர் சிறையிலும், மற்றொரு தரப்பினரை தேனி சிறையிலும் அடைக்க முடிவு செய்தனர். அவர்களை சிறையில் அடைக்கும் முன்பு அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் 8 பேர் விருதுநகர் சிறையிலும், 4 பேர் தேனி சிறையிலும் அடைக்கப்பட்டனர்.

ஒருவருக்கு கொரோனா

இந்தநிலையில் நேற்று கொரோனா பரிசோதனை முடிவுகள் வந்தன. அதில் தேனி சிறையில் அடைக்கப்பட்ட 4 பேரில் 18 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பதும், மற்றவர்களுக்கு பாதிப்பு இல்லை என்பதும் தெரியவந்தது.

உடனே அந்த வாலிபர் சிறையில் இருந்து மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில் தேனி சிறையில் அந்த வாலிபர் இருந்த அறை முழுவதும் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் அவருடன் இருந்த அனைவரும் தற்போது சிறையிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

போலீசார் அதிர்ச்சி

மேலும் மோதலில் கைது செய்யப்பட்ட அனைவரும் திடீர் நகர் போலீஸ் நிலையத்தில் வைத்துதான் விசாரிக்கப்பட்டனர். எனவே அங்கிருந்த போலீசார் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த வாலிபரை விசாரித்த இன்ஸ்பெக்டர் முதல் போலீசார் வரை 54 பேருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அந்த வாலிபர் சுமார் 12 மணி நேரத்திற்கு மேல் அங்கேயே இருந்ததால் போலீஸ் நிலையம் மூடப்படும் எனவும் பரபரப்பு எழுந்தது. இருந்தாலும் போலீஸ் நிலையம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இது தவிர அந்த வாலிபர் வசிக்கும் பகுதி முழுவதும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்தினார்கள். அங்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. இது மதுரையில் பரபரப்பை ஏற்படுத்தியது.