அளவுக்கு அதிகமாக தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற கொசுவலை நிறுவன மினி பஸ் சிறைபிடிப்பு
அளவுக்கு அதிகமாக தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற கரூர் தனியார் கொசுவலை நிறுவன மினி பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
லாலாபேட்டை,
அளவுக்கு அதிகமாக தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற கரூர் தனியார் கொசுவலை நிறுவன மினி பஸ்சை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.
மினிபஸ் சிறைபிடிப்பு
கரூரில் சோபியா என்ற பெயரில் தனியார் கொசுவலை நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்தநிறுவனத்தில் லாலாபேட்டை, குளித்தலை, கீழக்குட்டபட்டி, ஐனூற்றுமங்கலம், பிள்ளபாளையம் ஆகிய பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.
தொழிலாளர்கள் தினமும் நிறுவனத்திற்கு சொந்தமான மினி பஸ்சில் சென்று வருவது வழக்கம். இந்தநிலையில் கொரோனா ஊரடங்கால் மூடப்பட்ட அந்த நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திறக்கப்பட்டது.
இந்தநிலையில், நேற்று வழக்கம்போல் லாலாபேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தொழிலாளர்கள் அந்த பஸ்சில் புறப்பட்டு நிறுவனத்திற்கு சென்று கொண்டிருந்தனர். மினி பஸ்சை கள்ளபள்ளியைச் சேர்ந்த சின்னப்பன் (வயது 55) என்பவர் ஓட்டிச்சென்றார். அந்த பஸ்சில் அளவுக்கு அதிகமாக தொழிலாளர்கள் இருந்துள்ளனர். மேலும், முககவசம் அணியாமலும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் இருந்துள்ளனர். இதைக்கண்ட லாலாபேட்டை பொதுமக்கள் அந்த பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பஸ்சில் இருந்த தொழிலாளர்கள், பொதுமக்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
போலீசார் வழக்குப்பதிவு
இதுகுறித்து லாலாபேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். பின்னர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, பொதுமக்கள் கூறுகையில், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து செல்ல வேண்டும், பஸ்களில் குறைவான எண்ணிக்கையில் தொழிலாளர்களை ஏற்றி செல்ல வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. அதனையும் மீறி மினி பஸ்சில் தொழிலாளர்களை அளவுக்கு, அதிகமாக ஏற்றி செல்கின்றனர்.
மேலும், சம்பந்தப்பட்ட தொழிலாளர்களிடமும், பஸ் டிரைவரிடமும் நாங்கள் பலமுறை எடுத்து கூறியும் கேட்கவில்லை. இதனால் நாங்கள் அந்த பஸ்சை சிறைபிடித்துள்ளோம் என கூறினர். இதையடுத்து போலீசார் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதையடுத்து அதே பஸ்சில் 2 முறை தொழிலாளர்கள் ஏற்றப்பட்டு, நிறுவனத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். இதுகுறித்து மினி பஸ் டிரைவர் சின்னப்பன் மீது லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் லாலாபேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story