முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ; அதிகாரிகள் நடவடிக்கை


முக கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் ; அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 23 May 2020 5:01 AM GMT (Updated: 23 May 2020 5:01 AM GMT)

சேத்தியாத்தோப்பு, புவனகிரியில் முககவசம் அணியாதவர்களிடம் அதிகாரிகள் அபராதம் வசூலித்தனர்.

சேத்தியாத்தோப்பு, 

 உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தமிழக அரசு சுகாதாரத்துறை வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முககவசம் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. இருப்பினும் பொதுமக்கள் தங்களின் அலட்சியத்தால் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்தனர். 

இவர்களிடம் தற்போது அபராதம் வசூலிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் புவனகிரி தாசில்தார் சுமதி சேத்தியாத்தோப்பு கடைவீதிக்கு வரும் மக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்களா என்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது முககவசம் அணியாமல் வந்தவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதன்படி சுமார் 200 பேருக்கு தலா ரூ.100 வீதம் அபராதம் வசூலிக்கப்பட்டது. 

கொரோனா பரவலை தடுக்க பொதுமக்களிடம் முககவசம் அணிந்து தான் வீட்டை விட்டு வெளியே வரவேண்டும் என்று தாசில்தார் சுமதி அறிவுறுத்தினார். 

ஆய்வின் போது, சேத்தியாதோப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கராஜா, பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் சுபாஷ், கிராம நிர்வாக அலுவலர் சுரேந்தர், உதவியாளர்கள் அன்பு, செல்வராஜ், ராஜவேல், சேகர் உள்பட பலர் உடனிருந்தனர்.  

இதேபோல் புவனகிரி கடைவீதியில் தாசில்தார் சுமதி முன்னிலையில், புவனகிரி பேரூராட்சி செயல் அலுவலர் திருஞானசம்பந்தம் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் புவனகிரி கடைவீதிக்கு சென்று முககவசம் அணியாத கடைக்காரர்களிடம் ரூ.100 அபராதம் விதித்து ரசீது சீட்டை கொடுத்தனர்.

 மேலும் சாலையில் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்தவர்களுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது. அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப்-இன்ஸ்பெக்டர் டைமன் துரை, பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் ராஜ்குமார், ராசு ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story