தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்


தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
x

விருதுநகர் மாவட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர், 

வத்திராயிருப்பு முத்தாலம்மன் திடல் அருகில் பல்வேறு தொழிற்சங்கங்கள் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக அதிகரிக்கக்கூடாது, கொரோனா நிவாரணமாக ரூ.7,500 வழங்க வேண்டும், விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரத்தை நிறுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர் முன்னேற்றச்சங்கம், ஏ.ஐ.டி.யூ.சி., சி.ஐ.டி.யூ. ஆகிய தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் ஜெயக்குமார், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணைச்செயலாளர் கோவிந்தன், தொ.மு.ச. சுந்தரமகாலிங்கம், கண்ணன், முத்துமாரி, சி.ஐ.டி.யூ. முத்துக்கருப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர்கள் சங்கம் சார்பில் வத்திராயிருப்பு பேரூராட்சி அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேரூராட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலமுருகன், மாவட்ட செயலாளர் கருப்பையா உள்ளிட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்

இதேபோல ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வலையபட்டி துணை மின்நிலையத்தில் சி.ஐ.டி.யூ. கோட்ட செயலாளர் ராஜாராம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில் நிலையம் செல்லும் வழியில் உள்ள நகர் துணை மின் நிலைய முன்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சி.ஐ.டி.யூ. சார்பில் ராமசாமி, தொ.மு.ச. சார்பில் ஜெயபால், ஏ.ஐ.டி.யூ.சி. சார்பில் ஆவுடையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர். வத்திராயிருப்பு துணை மின் நிலையம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மின் வாரிய பணியாளர் சங்கம் சார்பில் மாயாண்டி, ரமாகந்தன் கலந்து கொண்டனர்.

ஆலங்குளம் டி.என்.சி முக்குரோட்டில் அனைத்து கட்சி தொழிற்சங்கத்தின் சார்பில் மத்திய-மாநில அரசு தொழிலாளர்களின் விரோதப்போக்கை கண்டித்து ஏ.ஐ.டி.யு.சி கட்டிட தொழிற்சங்கத்தின் மாவட்ட செயலாளர் நடராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சி.ஐ.டி.யூ வெம்பக்கோட்டை ஒன்றிய செயலாளர் பெரியசக்கரை, விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் கொங்கன்குளம் பாலகிருஷ்ணன், வெம்பக்கோட்டை வட்டார காங்கிராஸ் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, மாவட்ட விவசாய தொழிலாளர் சங்க துணை தலைவர் சின்ன முனியாண்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story