100 நாள் வேலையை முழுமையாக வழங்க நடவடிக்கை தேவை விருதுநகர் கலெக்டரிடம் வலியுறுத்தல்
மத்திய-மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளபடி விருதுநகர் மாவட்டத்தில் 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் அனைத்து கிராமங்களிலும் 100 சதவீத பயனாளிகளுக்கு வேலை வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
விருதுநகர்,
மத்திய நிதி அமைச்சகம் நாடு முழுவதும் 100 சதவீதம் 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு வேலை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இதற்காக சிறப்பு பொருளாதார ஊக்க திட்டத்தின்கீழ் ரூ.40 ஆயிரம் கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமிழக முதல்-அமைச்சரும், அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் இத்திட்டத்தில் பயனாளிகளுக்கு 100 சதவீதம் வேலை வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
10 சதவீதம்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 450 கிராம பஞ்சாயத்துகளில் 6,413 பயனாளிகளுக்கு மட்டுமே வேலை வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது, விருதுநகர் அருகே உள்ள வள்ளியூர் கிராம பஞ்சாயத்தில் 813 பேர் இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள நிலையில் 70 பயனாளிகளுக்கு மட்டும் வேலை அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் இதற்கான அரசு உத்தரவு வரவில்லை என கூறிய நிலையில் நடப்பு வாரத்தில் முழுமையாக வேலை வழங்கப்படும் என தெரிவித்து இருந்தது. ஆனாலும் இந்த பணி முழுமையாக வழங்கப்படாத நிலை நீடிக்கிறது.
இந்த நிலையில் முழுமையாக வேலை வழங்கக் கோரி காரியாபட்டி யூனியன் அலுவலகத்தை பயனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி உள்ளனர். மேலும் நிர்ணயிக்கப்பட்ட தினசரி ஊதியமான ரூ.229-ஐ வழங்காமல் வேலை அளவை காரணம் காட்டி அதிகபட்சமாக பெண் பயனாளிகளுக்கு ரூ.150 வரையே ஊதியம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. களப்பணியாளர்கள் பெண் பயனாளிகளுக்கு சாத்தியப்படாத வேலை அளவீட்டை கொடுப்பதனால் ஊதியம் குறைவதாகவும் புகார் கூறப்படுகிறது.
கோரிக்கை
எனவே மாவட்ட நிர்வாகம் மத்திய-மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளபடி இம்மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமபஞ்சாயத்துகளிலும் பதிவு செய்துள்ள பயனாளிகளுக்கு சுழற்சி முறையில் முழுமையாக வேலை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. தற்போது உள்ள நிலையில் குடிமராமத்து பணிகள் தொடங்கப்பட உள்ளதால் 100 நாள் வேலை திட்ட பயனாளிகளுக்கு மராமத்து பணிகளையும் வழங்குவதற்கு வாய்ப்பு உள்ளது.
Related Tags :
Next Story