காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்: நிலங்கள் கையகப்படுத்தப்படும் பணி விரைவில் தொடக்கம் கலெக்டர் தகவல்


காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம்: நிலங்கள் கையகப்படுத்தப்படும் பணி விரைவில் தொடக்கம் கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 23 May 2020 5:34 AM GMT (Updated: 23 May 2020 5:34 AM GMT)

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிலங்கள் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்படும் என கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

புதுக்கோட்டை, 

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்திற்கு நிலங்கள் கையகப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்படும் என கலெக்டர் உமாமகேஸ்வரி தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தின் மூலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் 20,249.26 ஹெக்டேர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற உள்ளது. இந்த திட்டத்தை விரைவுபடுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் இத்திட்டத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தில் நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தனியாக மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

இத்திட்டம் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமையில் நேற்று நடந்தது. வருவாய் அதிகாரி ரம்யாதேவி, மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன், பொதுப்பணித்துறை (நீர்வள ஆதாரம்) உதவிப்பொறியாளர் உமாசங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

656 ஹெக்டேர் நிலம்

கூட்டத்தின் போது கலெக்டர் உமாமகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் நிலம் கையகப்படுத்த தனியாக மாவட்ட வருவாய் அதிகாரியின் கீழ் 3 தாசில்தார்கள் தலைமையில் 3 பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இப்பணிக்கு 656.36 ஹெக்டேர் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. விராலிமலை, குளத்தூர், புதுக்கோட்டை ஆகிய 3 வட்டங்களில் நிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளது. நிலம் கையகப்படுத்த அறிவிப்பு வெளியிடப்பட்ட பின் பணிகள் தொடங்கப்படும். முதற்கட்ட பணிகள் தொடங்க 4 மாதங்கள் ஆகிவிடும் என்றார்.

முதல்-அமைச்சர் தொடங்கி...

காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தில் முதல் கட்ட பணிகளை முதல்-அமைச்சர் விரைவில் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதற்காக இத்திட்டப்பணிகள் விரைவுப்படுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு நாளும் இந்த பணிகள் தொடர்பான விவரங்களை தனக்கும் தகவல் தெரிவிக்கும்படி இந்த பிரிவு அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

Next Story