சூறாவளி காற்றுக்கு 10 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன ; இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை


சூறாவளி காற்றுக்கு 10 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன ; இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 23 May 2020 11:44 AM IST (Updated: 23 May 2020 11:44 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் பகுதியில் வீசிய சூறாவளி காற்றுக்கு 10 ஆயிரம் வாழைகள் சாய்ந்தன. அதற்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

பவானிசாகர்,  

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே கொத்தமங்கலம், பசுவபாளையம், கொக்கரகுண்டி, தயிர்பள்ளம் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் வாழை சாகுபடி செய்துள்ளனர். அனைத்து வாழை மரங்களும் வளர்ந்து குலை தள்ளிய நிலையில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தன.  

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு பவானிசாகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த பலத்த சூறாவளி காற்று வீசியது. அதைத்தொடர்ந்து மழையும் பெய்தது. இந்த சூறவாளி காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன. சில இடங்களில் முறிந்து விழுந்தன. இதனால் விவசாயிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளானார்கள். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் கூறியதாவது:- பவானிசாகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வீசிய பலத்த சூறாவளி காற்று காரணமாக சுமார் 10 ஆயிரம் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்துவிட்டன. 

ஏற்கனவே கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக ஊரடங்கு உத்தரவால் வாழை தார்களுக்கு விலை கிடைக்காமலும், வாழை தார்களை விற்பனைக்கு கொண்டு செல்ல முடியாமலும் சிரமப்பட்டு வருகிறோம். 

இதனால் நஷ்டத்தை சந்தித்து வந்த நிலையில், தற்போது சூறாவளி காற்றுக்கு வாழை மரங்கள் சேதமடைந்து இருப்பது பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  

எனவே சூறாவளி காற்றினால் பாதிக்கப்பட்ட வாழை மரங்களை கணக்கெடுத்து அதற்குரிய இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு வழங்க அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story