மீன்சுருட்டி அருகே சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதாக 7 பேர் மீது வழக்கு


மீன்சுருட்டி அருகே சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியதாக 7 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 23 May 2020 12:09 PM IST (Updated: 23 May 2020 12:09 PM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் காலனி தெருவை சேர்ந்தவர் விஜயேந்திரன்(வயது 32).

மீன்சுருட்டி, 

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே உள்ள சொக்கலிங்கபுரம் காலனி தெருவை சேர்ந்தவர் விஜயேந்திரன்(வயது 32). இவர் நெல்லித்தோப்பு அருகே சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் விற்பனை நிலையத்தில் கடந்த 20 ஆண்டுகளாக வேலை பார்த்து வருகிறார். 

சொக்கலிங்கபுரம் மெயின் ரோட்டு தெருவை சேர்ந்தவர் தினகரன். இவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு விஜயேந்திரனிடம் ரூ.50-க்கு கடனாக பெட்ரோல் போட்டு கொண்டு போனவர். மீண்டும் நேற்று முன்தினம் மாலை 3 மணியளவில் பெட்ரோல் போட வந்துள்ளார். இந்நிலையில் வந்தவரிடம் பணம் கேட்டதாக தெரிகிறது.

அதற்கு தினகரன், விஜயேந்திரனின் சாதி பெயரை சொல்லி திட்டி தாக்கியுள்ளார். பின்னர் அங்கிருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பின்னர் 4.30 மணியளவில் தினகரன், அவரது உறவினர்கள் திலகர்(38), சஞ்சீவி என்கிற சின்னகண்ணாடி, தினகரன் மகன் தீபன், விமல், பிரியதர்ஷன், சிபிராஜ் உள்பட 7 பேர் கொண்ட கும்பல் விஜயேந்திரனை தாக்கியதில் பலத்த காயம் அடைந்தார். 

உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் விஜயேந்திரனை மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து தகவலறிந்த ஜெயங்கொண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு மோகன்தாஸ் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து திலகர், சஞ்சீவி, விமல் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார். மேலும் தலைமறைவாக மற்றவர்களை தேடி வருகிறார்.

Next Story