ரம்ஜான் பண்டிகை: கொரோனா தாக்கத்தால் ஆடுகள் வரத்து குறைவு மட்டன் விலை உயரும் அபாயம்


ரம்ஜான் பண்டிகை: கொரோனா தாக்கத்தால் ஆடுகள் வரத்து குறைவு மட்டன் விலை உயரும் அபாயம்
x
தினத்தந்தி 24 May 2020 3:15 AM IST (Updated: 24 May 2020 1:00 AM IST)
t-max-icont-min-icon

ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில், கொரோனா தாக்கத்தால் ஆடுகள் வரத்து குறைந்துள்ளதால் மட்டன் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

சென்னை,

இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை பிறை தெரிந்தவுடன் கொண்டாடப்படும். இதற்கிடையே தமிழகத்தில் அரசு சார்பில் நாளை (திங்கட்கிழமை) ரம்ஜான் பண்டிகைக்கான விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரம்ஜான் பண்டிகை தினத்தில் முஸ்லிம்கள் பெரும்பாலும் மட்டன் எடுத்து பிரியாணி, நெய் சோறு, இடியாப்பம்-பாயா சமைப்பது வழக்கம். இதனால், ரம்ஜான் தினத்தன்று அதிக அளவில் மட்டன் விற்பனையாவது வழக்கம்.

ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பரவலால் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவால் சென்னைக்கு வரும் ஆடுகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. இதனால், மட்டன் விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை ஆட்டிறைச்சி சில்லரை விற்பனையாளர்கள் சங்க துணைத்தலைவர் எம்.அன்வர்பாஷா குரேஷி கூறியதாவது:-

சென்னையில் ரம்ஜான் பண்டிகைக்கு அதிக அளவில் மட்டன் விற்பனை ஆகும். ஆனால், தற்போது கொரோனா வைரஸ் பரவலால் வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் ஆடுகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

அருகில் உள்ள ஆந்திர மற்றும் மராட்டிய மாநிலங்களில் இருந்து மட்டுமே ஆடுகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு உள்ளன.

வழக்கமாக ரம்ஜான் பண்டிகைக்கு குறைந்தபட்சம் 10 ஆயிரம் ஆடுகள் சென்னைக்கு கொண்டு வரப்படும். இந்த ஆண்டு 6 ஆயிரம் ஆடுகள் தான் கொண்டு வரப்பட்டுள்ளன. அதே நேரத்தில் புளியந்தோப்பு மற்றும் வில்லிவாக்கம் இறைச்சி கூடங்கள்(ஆட்டு தொட்டி) மூடப்பட்டுள்ளன. இதனால், ஆட்டிறைச்சி வியாபாரிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சைதாப்பேட்டையில் உள்ள இறைச்சி கூடம் மட்டும் திறந்துள்ளது.

சைதாப்பேட்டை இறைச்சி கூடத்தில் குறைந்த அளவிலான இடவசதி உள்ளதால், இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 2 மணி முதலே ஆடுகள் வெட்டும் பணி தொடங்கி நாளை காலை 8 மணி வரை நடைபெறும். ஆடுகளின் வரத்து குறைந்துள்ளதால் இந்த ஆண்டு மட்டன் விலை ரூ.100 அதிகரித்து ஒரு கிலோ மட்டன் 900 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும். கடந்த ஆண்டு ரம்ஜான் பண்டிகைக்கு ஒரு கிலோ மட்டன் 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில், மாட்டு இறைச்சி - ஆட்டு இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பு சார்பில் புளியந்தோப்பு இறைச்சி கூடத்தை இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷுக்கு கடிதம் எழுதி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புளியந்தோப்பு இறைச்சி கூடம் திறக்கப்படாவிட்டால் பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்த போவதாக அந்த கூட்டமைப்பினர் தெரிவித்து உள்ளனர்.

Next Story