தொண்டு நிறுவனங்கள் மூலம் குடிசை பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு


தொண்டு நிறுவனங்கள் மூலம் குடிசை பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு
x
தினத்தந்தி 24 May 2020 3:30 AM IST (Updated: 24 May 2020 1:03 AM IST)
t-max-icont-min-icon

தொண்டு நிறுவனங்கள் மூலம் குடிசை பகுதிகளில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பு அதிகாரி ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று ஆய்வு செய்தார்.

சென்னை,

பெருநகர மாநகராட்சியின் தேனாம்பேட்டை மண்டலத்துக்கு உட்பட்ட நொச்சிநகர் பகுதியில் மாநகராட்சியுடன் இணைந்து டான் பாஸ்கோ அன்பு இல்லம் தொண்டு நிறுவனம் மூலம் மேற்கொள்ளப்பட்டுவரும் கொரோனா தடுப்பு பணிகளை சிறப்பு அதிகாரியும், வருவாய் நிர்வாக கமிஷனருமான டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தனர். அந்த பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், ஊட்டச்சத்து மாத்திரைகள் மற்றும் முககவசங்களை வழங்கி அவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள்

வைரஸ் தொற்று பாதித்த பகுதிகளில் 97 தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்த 2 ஆயிரத்து 500 களப்பணியாளர்களை கொண்டு வைரஸ் தொற்று தடுப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இவர்கள் சென்னையில் உள்ள 1,979 குடிசை பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களை அணுகி வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான அடிப்படை ஒழுக்கங்களை எடுத்துக்கூறி விழிப்புணர்வு ஏற்படுத்துவார்கள். மேலும் அப்பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு மறு பயன்பாட்டுடன் கூடிய துணியால் ஆன முககவசங்கள், நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கும் கபசுர குடிநீர் மற்றும் வைட்டமின் மாத்திரைகளை வீடுகள் தோறும் சென்று வழங்குவார்கள்.

குடிசை பகுதிகளில்...

பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 140 நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு சிகிச்சை பெறும் சுமார் 1.75 லட்சம் நபர்களின் பட்டியல் டாக்டர்களால் தயார் செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி மருத்துவ அலுவலர்கள் அவர்களுக்கு ஒரு மாதத்துக்கு தேவையான மருந்துகளை வழங்கி அவ்வப்போது அவர்கள் உடல்நிலை குறித்து கேட்டறிவார்கள். இந்த பணிகள் சென்னையில் உள்ள அனைத்து குடிசை பகுதிகளிலும் தொடங்கப்பட்டுள்ளது என கொரோனா தடுப்பு பணி சிறப்பு அதிகாரி டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் கோ.பிரகாஷ் ஆகியோர் தெரிவித்தனர்.

இந்த ஆய்வின் போது மண்டல அதிகாரி ஜெ.ரவிக்குமார், என்.யூ.எல்.எம். ஒருங்கிணைப்பாளர் ஆஷா, டான் பாஸ்கோ அன்பு இல்ல ஒருங்கிணைப்பாளர் ஜோசப் லியோ மற்றும் உமா ரவிக்குமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story