எல்லைகளில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவு


எல்லைகளில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்க வேண்டும் அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவு
x
தினத்தந்தி 24 May 2020 4:45 AM IST (Updated: 24 May 2020 1:42 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரி எல்லைப் பகுதிகளில் கட்டுப்பாடுகளை தீவிரமாக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரி,

புதுவையில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மக்களிடையே அச்சம் காணப்படுகிறது. தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆட்சியாளர்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இதையடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ், தலைமை செயலாளர் அஸ்வனி குமார், சுகாதாரத்துறை செயலாளர் பிரசாந்த் குமார் பாண்டே, இயக்குனர் மோகன் குமார், கலெக்டர் அருண், போலீஸ் டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவஸ்தவா, சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அப்போது புதுவையில் தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டது. வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களால் தான் எண்ணிக்கை உயருவதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் குறித்த தகவல்கள் புதுவை அரசுக்கு முறையாக தெரிவிக்கப்படுவதில்லை. இதனால் அவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

எனவே வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் குறித்த விவரங்களை பெற்று அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து கலெக்டர் தலைமையில் அதிகாரிகள் குழுவினை அமைத்து விமான நிலையங்களில் இருந்து தகவல்களை பெற திட்டமிடப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி தற்போது எல்லைப் பகுதிகளில் தளர்வுகள் கடைபிடிக்கப்படாததால் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதாக புதுச்சேரிக்குள் நுழையும் வாய்ப்பு உள்ளது. எனவே கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு அதிகாரிகளுக்கு முதல்- அமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டார். இ-பாஸ் இல்லாமல் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என்றும் அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.


Next Story