புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மோசமாக நடத்தி கர்நாடகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடாது காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி


புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மோசமாக நடத்தி கர்நாடகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடாது காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பேட்டி
x
தினத்தந்தி 24 May 2020 4:15 AM IST (Updated: 24 May 2020 3:47 AM IST)
t-max-icont-min-icon

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மோசமாக நடத்தி கர்நாடகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தக்கூடாது என்று காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் கூறினார்.

பெங்களூரு,

கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர் களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்துகளின் பிரதிநிதிகளின் பதவி காலம் வருகிற ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் முடிவடைகிறது. பதவி காலம் முடிவடைவதற்கு 45 நாட்களுக்கு முன்னதாகவே இட ஒதுக்கீட்டு பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும். தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும். ஆனால் தேர்தல் பணிகள் மேற்கொள்வதை தவிர்த்துவிட்டு, கொரோனா தடுப்பு பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்களுக்கு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனால் மாவட்ட கலெக்டர்கள் கிராம பஞ்சாயத்து தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்கவில்லை. பா.ஜனதாவினரை கிராம பஞ்சாயத்து நிர்வாகிகளாக நியமிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது. கிராம பஞ்சாயத்து தேர்தலை நடத்தக்கூடாது என்று திட்டமிட்டு இந்த முடிவை கர்நாடக அரசு எடுத்துள்ளது. மாவட்ட கலெக்டர்கள் மூலம் பா.ஜனதாவினரை நிர்வாக உறுப்பினர்களாக நியமிக்க அரசு சதி செய்துள்ளது. இதை காங்கிரஸ் ஒருபோதும் சகித்துக்கொள்ளாது. அரசின் முடிவை எதிர்த்து எங்கள் கட்சி தீவிரமாக போராட்டம் நடத்தும்.

புலம் பெயர்ந்த தொழிலாளர்களை மோசமாக நடத்தி கர்நாடகத்தின் நற்பெயருக்கு இந்த அரசு களங்கத்தை ஏற்படுத்தக்கூடாது. தங்களை சொந்த ஊருக்கு அனுப்புமாறு கேட்டு சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பெங்களூருவில் குவிந்துள்ளனர். பயண கட்டணத்தை செலுத்துமாறு வற்புறுத்துகிறார்கள். அவர்களுக்கு உரிய வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க முடியாவிட்டால், அந்த பணியை எங்களிடம் விட்டு விடுங்கள்.

அவர்களின் பயண செலவு முழுவதையும் நாங்கள் ஏற்கிறோம். அந்த தொழிலாளர்கள் பணிபுரிந்த நிறுவனங்களின் உரிமையாளர்களை தொடர்பு கொண்டு, உணவு உள்ளிட்ட வசதிகளை செய்து கொடுக்குமாறு ஏற்பாடு செய்கிறோம். அந்த தொழிலாளர்களை கவுரவமாக நடத்தி மீண்டும் கர்நாடகத்திற்கு திரும்ப நாங்கள் நடவடிக்கை எடுக்கிறோம். அவர்களை மோசமாக நடத்தினால், மீண்டும் அவர்கள் கர்நாடகம் திரும்ப மாட்டார்கள். அவர்களை தொழிலாளர்கள் என்று அழைப்பதை விட இந்த நாட்டை நிர்மானிப்பவர்கள் என்று அழைப்பது தான் பொருத்தமாக இருக்கும்.

இங்கு கட்டுமான பணிகளில் வியர்வை சிந்தி உழைத்த அவர்களுக்கு நாம் உரிய மரியாதை வழங்க வேண்டும். அந்த தொழிலாளர்கள் மீண்டும் கர்நாடகத்திற்கு வராவிட்டால், கட்டுமான பணிகள் முடங்கிவிடும் அபாயம் உள்ளது. தொழிலாளர்கள், உரிமையாளர்கள் மற்றும் அரசு இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் பிரச்சினை எழுந்துள்ளது. தொழிலாளர்களின் பயண செலவை ஏற்க காங்கிரஸ் தயாராக உள்ளது. ஒருபுறம் தொழிலாளர்களுக்கு உதவி செய்ய அரசு மறுக்கிறது. மறுபுறம் அந்த தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் வழங்கும் உதவியை புறக்கணிக்கிறது.

இவ்வாறு டி.கே. சிவக்குமார் கூறினார்.

Next Story