டிராக்டர் டிரைவருக்கு கொரோனா: தென்காசியில் சுகாதார பணிகள் தீவிரம் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு


டிராக்டர் டிரைவருக்கு கொரோனா: தென்காசியில் சுகாதார பணிகள் தீவிரம் கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் ஆய்வு
x
தினத்தந்தி 24 May 2020 4:00 AM IST (Updated: 24 May 2020 4:00 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் டிராக்டர் டிரைவருக்கு கொரோனா பாதிப்பை தொடர்ந்து, சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் பார்வையிட்டார்.

தென்காசி, 

தென்காசியில் டிராக்டர் டிரைவருக்கு கொரோனா பாதிப்பை தொடர்ந்து, சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன. இதனை மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் பார்வையிட்டார்.

டிரைவருக்கு தொற்று

தென்காசி மாவட்டத்தில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்று இருப்பதாக 80-க்கும் மேற்பட்ட நபர்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். அதில் 40-க்கும் மேற்பட்டவர்கள் பூரண குணமடைந்து வீட்டிற்கு திரும்பினர். மராட்டிய மாநிலத்தில் இருந்து தென்காசி மாவட்ட பகுதிகளுக்கு வருகை தந்த சிலருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டு அவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை தென்காசி நகர் பகுதியில் யாருக்கும் நோய்த்தொற்று இல்லை.

இந்த நிலையில் நேற்று தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட கீழப்புலியூரை சேர்ந்த டிராக்டர் டிரைவர் ஒருவர் கடந்த 3 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்ட நிலையில் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றுள்ளார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், அவருக்கு கொரோனா தொற்று இருப்பதை கண்டறிந்தனர்.

கலெக்டர் ஆய்வு

இதனால் அவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் தொடர்பு கொண்டுள்ள பலரையும் விசாரித்து அனைவரையும் தனிமைப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தென்காசி நகராட்சி சுகாதார அலுவலர்கள் கீழப்புலியூர் சென்று அவர் வசித்த பகுதிக்கு வெளியில் இருந்து யாரும் செல்லாத அளவிலும், உள்ளிருந்து யாரும் வெளிவராத அளவிலும் அடைத்தனர். நகராட்சி சுகாதார அலுவலர்கள் அப்பகுதியில் கிருமிநாசினி மருந்துகள் தெளித்து சுகாதார பணிகளை மேற்கொண்டனர்.

மாவட்ட கலெக்டர் அருண் சுந்தர் தயாளன் நேரில் சென்று சுகாதார பணிகளை ஆய்வு செய்தார். நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) ஹசீனா, சுகாதார அலுவலர் முகமது இஸ்மாயில், சுகாதார ஆய்வாளர் சிவா ஆகியோர் உடன் இருந்தனர்.

கடையம் பகுதியில் ஒருவருக்கு தொற்று

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி கிராமத்திற்கு சென்னையில் இருந்து வந்துள்ள ஒருவருக்கும் நேற்று கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரும் உடனடியாக சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தென்காசி நகரில் முதன்முதலாக கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தென்காசி நகர மக்களிடையே பரபரப்பை எற்படுத்தி உள்ளது.

Next Story