மாவட்டத்தில் 59 நாட்களுக்கு பிறகு ஆட்டோக்கள் ஓடின ஊரடங்கால் பயணிகளின் வருகை குறைந்தது


மாவட்டத்தில் 59 நாட்களுக்கு பிறகு ஆட்டோக்கள் ஓடின ஊரடங்கால் பயணிகளின் வருகை குறைந்தது
x
தினத்தந்தி 23 May 2020 10:55 PM GMT (Updated: 23 May 2020 10:55 PM GMT)

மாவட்டத்தில் 59 நாட்களுக்கு பிறகு ஆட்டோக்கள் நேற்று ஓட தொடங்கின. ஊரடங்கு காரணமாக பயணிகள் வருகை மிக குறைந்து இருந்ததால் டிரைவர்கள் கவலையடைந்தனர்.

கடலூர், 

மாவட்டத்தில் 59 நாட்களுக்கு பிறகு ஆட்டோக்கள் நேற்று ஓட தொடங்கின. ஊரடங்கு காரணமாக பயணிகள் வருகை மிக குறைந்து இருந்ததால் டிரைவர்கள் கவலையடைந்தனர்.

தளர்வு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதையடுத்து பொதுமக்களின் வாழ்வாதாரம் மற்றும் நோய் தொற்றின் தன்மையை கருத்தில் கொண்டு சில பாதுகாப்பு வழிமுறைகளுடன் தமிழ்நாடு அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்து வருகிறது.

இதன்படி சென்னை மாநகர பகுதியை தவிர தமிழகம் முழுவதும் ஆட்டோ, சைக்கிள் ரிக்‌ஷா ஆகிய வாகனங்களை டிரைவர்கள் ஒரு பயணி மட்டும் பயணிக்கும் வகையில் இயக்க உத்தரவிட்டது. அதுவும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே இயக்க வேண்டும் என்றும் போன்ற பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

ஆட்டோக்கள் ஓடின

இதைத்தொடர்ந்து நேற்று கடலூரில் ஆட்டோக்கள் ஓடின. ஊரடங்கு உத்தரவு தளர்வுக்கு பிறகு, அதாவது சுமார் 59 நாட்களுக்கு பிறகு ஆட்டோக்கள் இயக்கப்பட்டதால் டிரைவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனாலும் போதிய சவாரி கிடைக்கவில்லை. ஆட்டோவில் ஒரு பயணி மட்டுமே செல்ல அனுமதிக்கப்பட்டது. அவரும், டிரைவரும் முக கவசம் அணிந்திருந்தனர். பயணிகள் பயன்படுத்தும் வகையில் சானிடைசரை டிரைவர்கள் வைத்திருந்தனர். அவர்கள் பயணிகளுக்கு கொடுத்து கைகளை சுத்தம் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தினர்.

வழக்கு

முன்னதாக ஆட்டோக் களை கிருமி நாசினி தெளித்து பாதுகாப்பாக வைத்திருந்தனர். டிரைவர்களும் அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ வேண்டும் என்று பயணிகளிடம் அறிவுறுத்தினர். முக கவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை. இதேபோல் பண்ருட்டி, நெய்வேலி, விருத்தாசலம், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் போன்ற மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் ஆட்டோக் களை டிரைவர்கள் முக கவசம் அணிந்தபடி இயக்கினர்.

இதனிடையே ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்து என்பது இயங்காமல் உள்ளது. மேலும் கொரோனா அச்சத்தால் மக்களும் வெளியே செல்ல அஞ்சுகிறார்கள். இதனால் ஆட்டோக்களை தேடி வரும் பயணிகள் வழக்கத்தை விட, மிக மிக குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தது. எனவே வழக்கமான வருவாய் எதுவும் கிடைக்கவில்லை என்று டிரைவர் ஒருவர் தெரிவித்தார்.

Next Story