அடுத்த மாதம் 15-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: மாவட்டத்தில் 35,546 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள் தேர்வு மையங்கள் அதிகரிப்பு


அடுத்த மாதம் 15-ந்தேதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு: மாவட்டத்தில் 35,546 மாணவ- மாணவிகள் எழுதுகிறார்கள் தேர்வு மையங்கள் அதிகரிப்பு
x
தினத்தந்தி 24 May 2020 4:46 AM IST (Updated: 24 May 2020 4:46 AM IST)
t-max-icont-min-icon

அடுத்த மாதம் (ஜூன்) 15-ந்தேதி நடக்கும் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வை கடலூர் மாவட்டத்தில் 35 ஆயிரத்து 546 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள்.

கடலூர், 

அடுத்த மாதம் (ஜூன்) 15-ந்தேதி நடக்கும் எஸ்.எஸ்.எல்.சி. அரசு பொதுத்தேர்வை கடலூர் மாவட்டத்தில் 35 ஆயிரத்து 546 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். தேர்வு மையங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதும் மையங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது, 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் மையங்களில் மேற்கொள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறும் மையங்கள், சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்படி அடுத்த மாதம் (ஜூன்) 15-ந்தேதி தொடங்கும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை கடலூர் மாவட்டத்தில் 35 ஆயிரத்து 546 மாணவ-மாணவிகள் எழுத உள்ளனர். இதில் 18 ஆயிரத்து 341 மாணவர்கள், 17 ஆயிரத்து 205 மாணவிகள் ஆவர்.

தேர்வு மையங்கள் அதிகரிப்பு

இதில் சமூக இடைவெளியை பின்பற்றி மாணவர்கள் தேர்வு எழுதுவதற்காக 143 தேர்வு மையங்களை தற்போது, 443 மையங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு மையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு போதிய பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேர்வு அறையில் 10 மாணவர்கள் மட்டுமே அமருவார்கள். 6 அடி தூரத்தில் அமர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தேர்வு நடைபெறும் பள்ளிகளில் உள்ள வகுப்பறைகள் காலை, மாலை என 2 வேளைகளில் கிருமி நாசினி தெளித்து தூய்மைப்படுத்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதை திட்ட இயக்குனர் தலைமையில் வட்டார வளர்ச்சி அலுவலர்களை கொண்ட குழுவினர் கண்காணிப்பர்.

அரசு பஸ்கள்

மாணவ-மாணவிகள் தங்கள் தேர்வு எழுதும் மையங்களுக்கு செல்ல வசதியாக அரசு பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதை மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலான குழுவினர் கண்காணிப்பார்கள். தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கும், கண்காணிக்கும் ஆசிரியர்களுக்கும் 3 முக கவசங்கள் வழங்கப்படும். அனைத்து பள்ளிகளிலும் சானிடைசர் வைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் அச்சமின்றி தேர்வு எழுத அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு பகுதிகள்

மாவட்டத்தில் கட்டுப்பாட்டு பகுதிகள் 25 ஆக குறைந்துள்ளது. இது மேலும் குறைய வாய்ப்புள்ளது. கட்டுப்பாட்டு பகுதியில் தேர்வு மையம் இல்லை. தேவைப்பட்டால் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மாணவர்கள் தேர்வு எழுத பிரத்யேக ஏற்பாடுகள் செய்யப்படும். மருத்துவக்குழுவினர் தயார் நிலையில் இருப்பார்கள். இதேபோல் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையங்களிலும் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்கள் மையங்களுக்கு வர அரசு பஸ் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் அன்புசெல்வன் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜகிருபாகரன், கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா, சப்-கலெக்டர்கள் பிரவின்குமார், விசுமகாஜன், கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரோஸ் நிர்மலா மற்றும் கல்வித்துறை, வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story