கொரோனா பாதித்த மனைவியுடன் சொந்த ஊருக்கு தப்பிய கணவர் தம்பதியை போலீசில் பிடித்து கொடுத்த கிராம மக்கள்


கொரோனா பாதித்த மனைவியுடன் சொந்த ஊருக்கு தப்பிய கணவர் தம்பதியை போலீசில் பிடித்து கொடுத்த கிராம மக்கள்
x
தினத்தந்தி 24 May 2020 12:00 AM GMT (Updated: 23 May 2020 11:57 PM GMT)

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மனைவியுடன் கணவர் சொந்த ஊருக்கு தப்பி சென்றார்.

மும்பை,

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மனைவியுடன் கணவர் சொந்த ஊருக்கு தப்பி சென்றார். அந்த தம்பதியை கிராம மக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

மும்பை சயான் பிரதிக்சா நகர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவர் 4 மாத கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவியை பரிசோதனைக்காக கடந்த 7-ந்தேதி சோமையா ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார். அங்கு அவர்களுக்கு நடத்திய சோதனையில் மனைவிக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து கர்ப்பிணி பெண்ணை தனிமை படுத்தி சிகிச்சை வழங்கி வந்தனர். இந்தநிலையில் கடந்த 18-ந்தேதி அதிகாலை 5 மணி அளவில் அந்த வாலிபர் தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றார். பின்னர் அவர்கள் சொந்த ஊரான மகாடுக்கு புறப்பட்டு சென்றனர். சுமார் 160 கி.மீ தூரம் வரை கடந்து சென்ற அவர்கள் பாசட் என்ற கிராமத்திற்கு சென்றனர்.

அப்போது அங்கிருந்த கிராம மக்கள் சந்தேகத்தின் பேரில் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர்கள் மும்பை ஆஸ்பத்திரியில் இருந்து தப்பி வந்த சம்பவம் தெரியவந்தது. இது பற்றி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதன்பேரில் போலீசார் அங்கு வந்து விசாரணை நடத்தினர். ஆனால் போலீசாரின் கேள்விகளுக்கு முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

இதையடுத்து போலீசார் தம்பதியை பாசட்டில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை நடத்தினர். இதில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் கணவரிடம் போலீஸ் நடத்திய விசாரணையில், பயத்தின் காரணமாக ஆஸ்பத்திரியில் இருந்து தப்பித்து சொந்த ஊர் செல்ல முயன்றதாக அவர் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story