வடமாநில தொழிலாளர்களுக்கு சிறப்பு ரெயில்: குமரியில் இருந்து மேலும் 37 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்


வடமாநில தொழிலாளர்களுக்கு சிறப்பு ரெயில்: குமரியில் இருந்து மேலும் 37 பேர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்
x
தினத்தந்தி 24 May 2020 6:12 AM IST (Updated: 24 May 2020 6:12 AM IST)
t-max-icont-min-icon

குமரியில் இருந்து மேலும் 37 வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

நாகர்கோவில், 

குமரியில் இருந்து மேலும் 37 வடமாநில தொழிலாளர்கள் சிறப்பு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

வடமாநில தொழிலாளர்கள் பரிதவிப்பு

கொரோனா ஊரடங்கின் காரணமாக குமரி மாவட்டத்தில் தங்கி இருந்து பல்வேறு வேலைகளில் ஈடுபட்டு வந்த வடமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்து வந்தனர். இந்த நிலையில் வெளிமாநிலங்களில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை மேற்கொண்டன.

அதன்படி சொந்த ஊர் செல்ல விரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அந்தந்த மாவட்டத்தில் தமிழக அரசின் இணைய தளத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்யுமாறு அறிவிக்கப்பட்டு இருந்தது. இதைத் தொடர்ந்து குமரி மாவட்டத்தில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களாக வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தனர்.

குமரியில் இருந்து சிறப்பு ரெயில்

விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் புலம் பெயர்ந்த தொழிலாளர்களை அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 957 தொழிலாளர்கள் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் இருந்து தனி ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் ராஜஸ்தான் மாநில தொழிலாளர்கள் 334 பேர் கன்னியாகுமரியில் இருந்தும், ஜார்க்கண்ட் மாநில தொழிலாளர்கள் 554 பேர் நாகர்கோவிலில் இருந்தும் தனித்தனி ரெயில்களில் அனுப்பி வைக்கப்பட்டனர்.

மராட்டிய மாநிலம்

இந்தநிலையில் மராட்டிய மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் 185 பேர் சொந்த ஊர் செல்வதற்காக குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தனர். இதற்காக மதுரையில் இருந்து மராட்டிய மாநிலம் புனேவுக்கு புறப்பட்டுச் செல்லும் ரெயிலில் ஏற்றி அனுப்புவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த ரெயில் நேற்று இரவு 9 மணிக்கு மதுரை சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றது.

இதற்காக நேற்று காலையிலேயே மராட்டிய மாநில தொழிலாளர்கள் நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்துக்கு வந்து சேருமாறு அறிவிக்கப்பட்டு இருந்தது. 185 பேரை அழைத்துச் செல்வதற்காக 6 அரசு பஸ்களும் தயார் நிலையில் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.

148 பேர் வரவில்லை

ஆனால் நேற்று மதியம் வரையில் 37 மராட்டிய மாநில தொழிலாளர்கள் மட்டுமே எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்துக்கு வந்து சேர்ந்தனர். மற்றவர்கள் யாரும் வரவில்லை. அரசு ஊரடங்கை தளர்த்தியதின் காரணமாக தொழிற்சாலைகள், கடைகள் போன்றவை இயங்க ஆரம்பித்துள்ளதால் விண்ணப்பித்தவர்களில் 148 பேர் சொந்த ஊர் செல்ல விரும்பாமல் தாங்கள் செய்து வந்த வேலைகளை தொடர்ந்துள்ளதாக தெரிகிறது.

இதையடுத்து ஒரு பஸ்சில் 37 தொழிலாளர்களும் ஏற்றப்பட்டு மதுரை ரெயில் நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் மகிழ்ச்சியோடு புறப்பட்டுச் சென்றனர். அவர்களுடன் தோவாளை தாசில்தார் திருவாழியும் உடன் சென்றார். மற்ற 5 பஸ்களும் அரசு போக்குவரத்துக்கழக பணிமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. தொழிலாளர்கள் புறப்படுவதற்கு முன் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் உணவு, தண்ணீர், பிஸ்கட் போன்றவை வழங்கப்பட்டன.

உதவி

காங்கிரஸ் கட்சியின் புலம்பெயரும் தொழிலாளர் நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய தலைவர் ராபர்ட் புரூஸ் தலைமையில் நிர்வாகிகள் வைகுண்டதாஸ், செல்வராஜ், விஜய், மராட்டிய மாநிலம் செல்லும் தொழிலாளர்கள் அனைவருக்கும் பிரட் பாக்கெட், தண்ணீர் பாட்டில் போன்றவற்றை வழங்கி வழியனுப்பி வைத்தனர்.

Next Story