தஞ்சை மாவட்டத்தில் 23 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லை கலெக்டர் தகவல்


தஞ்சை மாவட்டத்தில் 23 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லை கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 24 May 2020 2:31 AM GMT (Updated: 24 May 2020 2:31 AM GMT)

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 23 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லை என்று கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 23 நாட்களாக கொரோனா பாதிப்பு இல்லை என்று கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.

ஆய்வுக்கூட்டம்

தஞ்சை கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் கொரோனா தடுப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக்கூட்டம் கலெக்டர் கோவிந்தராவ் தலைமையில் நடந்தது.

கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 23 நாட்களாக கொரோனா பாதிப்பு பெரிய அளவில் ஏற்படவில்லை. வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலம், வெளிநாடுகளிலிருந்து வருபவர்களுக்கு மட்டுமே நோய்த்தொற்றுக்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது.

பரிசோதனை

பிற மாவட்டங்களிலிருந்து வருபவர்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் மட்டுமே, அவர்களை பரிசோதனை செய்ய வேண்டும். அறிகுறி இல்லாதவர்களை அவர்களது வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தி, அவர்களை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பிற மாநிலங்களிலிருந்து வருபவர்கள் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும். முடிவில் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்களை மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும்.

அறிகுறி இல்லாமல் சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் மையத்தில் தங்க வைத்து 7-வது நாள் முடிவில் 2-வது முறையாக பரிசோதனை செய்ய வேண்டும்.

ஒரு பகுதியில் உள்ள குடும்பத்தில் 5 நபர்களுக்கோ அல்லது அப்பகுதியில் 5 நபர்களுக்கோ கொரோனா அறிகுறி தென்பட்டால், அப்பகுதி கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், பட்டுக்கோட்டை உதவி கலெக்டர் கிளாஸ்டன்புஷ்பராஜ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Next Story