தஞ்சை மாவட்டத்தில் 59 நாட்களுக்கு பிறகு ஆட்டோக்கள் இயங்கின


தஞ்சை மாவட்டத்தில் 59 நாட்களுக்கு பிறகு ஆட்டோக்கள் இயங்கின
x
தினத்தந்தி 24 May 2020 2:50 AM GMT (Updated: 2020-05-24T08:20:45+05:30)

தஞ்சை மாவட்டத்தில் அரசு அனுமதி அளித்ததையடுத்து 59 நாட்களுக்கு பிறகு ஆட்டோக்கள் இயங்கின.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் அரசு அனுமதி அளித்ததையடுத்து 59 நாட்களுக்கு பிறகு ஆட்டோக்கள் இயங்கின.

ஊரடங்கு உத்தரவு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய அரசு 4-வது கட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கினால் பஸ், ரெயில், விமானம், ஆட்டோ, கார், லாரி போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயங்கி வருகின்றன. இந்த ஆட்டோக்கள் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் இயங்கவில்லை. இந்த நிலையில் ஆட்டோ டிரைவர்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதால் ஆட்டோக்களை இயக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து 1 பயணிகளுடன் மட்டும் ஆட்டோக்களை இயக்க அரசு அனுமதி அளித்தது.

59 நாட்களுக்கு பிறகு...

அதன்படி நேற்று 59 நாட்களுக்கு பிறகு ஆட்டோக்கள் தஞ்சை மாவட்டத்தில் இயங்கின. தஞ்சை பழைய பஸ் நிலையம், ரெயில் நிலையம், புதிய பஸ் நிலையம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. ஒரு சில ஆட்டோக்கள் ஒரு பயணிகளுடன் இயங்கின. சில ஆட்டோக்கள் 2 அல்லது 3 பயணிகளுடன் இயங்கின.

ஆட்டோக்கள் இயங்க அரசு அனுமதித்தாலும், பொது போக்குவரத்து இயங்காததால் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோக்கள் வழக்கம் போல நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. ரெயில், பஸ் போக்குவரத்து தொடங்கினால் தான் வெளியூர்களில் இருந்து பயணிகள் வந்து செல்வார்கள். அப்போது தான் ஆட்டோக்களும் வழக்கம் போல இயங்கும். ஆனால் நேற்று பொது போக்குவரத்து இயங்காததால் பயணிகள் எப்போது வருவார்கள் என ஆட்டோ டிரைவர்கள் காத்துக்கிடந்த வண்ணம் இருந்தனர்.

சவாரி கிடைக்கவில்லை

இது குறித்து ஆட்டோ டிரைவர்கள் கூறுகையில், “ஆட்டோக்களை அரசு இயக்க அனுமதி அளித்து இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். ஆனால் ஓரு பயணியுடன் மட்டும் என்பதை மாற்றி 2 பயணிகளையாவது ஏற்றிச்செல்ல அனுமதிக்க வேண்டும். ரெயில், பஸ்கள் இயங்காததால் காலை 7 மணி முதல் 11 மணி வரை ஒரு சவாரி கூட கிடைக்கவில்லை. தற்போது தெரிந்தவர்கள் எங்காவது செல்ல வேண்டும் என கூறினால் மட்டுமே சவாரி கிடைக்கக்கூடிய நிலை உள்ளது”என்றனர்.

Next Story