மாவட்ட செய்திகள்

வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்புநிவாரண நிதி வழங்கக்கோரி திரண்ட 36 ஆட்டோ டிரைவர்கள் கைது + "||" + Before the Vellore Collector's Office Raise relief funds 36 Auto drivers arrested

வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்புநிவாரண நிதி வழங்கக்கோரி திரண்ட 36 ஆட்டோ டிரைவர்கள் கைது

வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்புநிவாரண நிதி வழங்கக்கோரி திரண்ட 36 ஆட்டோ டிரைவர்கள் கைது
கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்ட 32 ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர்.
வேலூர், 

கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்கக்கோரி வேலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு திரண்ட 32 ஆட்டோ டிரைவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கோரிக்கை மனு

வேலூர் மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி. ஆட்டோ தொழிலாளர் சங்க தலைவர் லோகேஷ்குமார் தலைமையில் செயலாளர் சிம்புதேவன், பொருளாளர் உமாபதி மற்றும் 30-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் நேற்று வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். அவர்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர்.

144 தடை உத்தரவு அமலில் உள்ளதால் முக்கிய நிர்வாகிகள் 4 பேர் மட்டும் மனு அளிக்க செல்லும்படியும், மற்றவர்கள் அங்கிருந்து கலைந்து செல்லும்படி போலீசார் தெரிவித்தனர். அதையடுத்து சங்க மாவட்ட தலைவர் லோகேஷ்குமார் உள்பட 4 பேர் கலெக்டர் அலுவலக பொதுமேலாளரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருந்ததாவது:-

ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி

கொரோனா தொற்றால் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் சுமார் 50 நாட்களுக்கு மேலாக ஆட்டோக்கள் இயங்காததால் அனைத்து டிரைவர்களின் குடும்பங்களும் பொருளாதார ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது ஒரு பயணியுடன் மட்டும் ஆட்டோவை இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வாழ்வாதாரத்தை இழந்து காணப்படும் ஆட்டோ டிரைவர்களுக்கு ஆட்டோ இயக்க தடை விதிக்கப்பட்ட மாதத்தை கணக்கில் கொண்டு ரூ.10 ஆயிரம் நிவாரண நிதி வழங்க வேண்டும்.

தொழிலாளர் நலவாரியத்தில் பதிவு செய்யாத அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் நிவாரண நிதி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆட்டோவில் ஒரு பயணியை மட்டும் ஏற்றி செல்வதால் நஷ்டம் ஏற்படும். எனவே கொரோனா காலம் முடியும் வரை பெட்ரோல், டீசல் மானிய விலையில் வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் அதில் கூறியிருந்தனர்.

36 பேர் கைது

மனுவை பெற்றுக்கொண்ட பொதுமேலாளர் முரளி, ஆட்டோ தொழிற்சங்கத்தினர் அளித்த மனுக்கள், கலெக்டர் மூலம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவித்தார்.

கலெக்டர் அலுவலகம் முன்பு மனு அளிக்க திரண்டு வந்திருந்த ஆட்டோ டிரைவர்களை போலீசார் கலைந்து செல்லும்படி கூறினார். ஆனால் அவர்கள் கலைந்து செல்லாமல் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து போலீசார் 144 தடை உத்தரவை மீறியதாக 36 பேரை கைது செய்து வேனில் ஏற்றி தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது.