திருப்பூரில் போலீஸ் நிலையம் அருகே சம்பவம்: நகைக்கடைக்குள் புகுந்து அரிவாளை காட்டி 10 பவுன்நகை-பணம் கொள்ளை


திருப்பூரில் போலீஸ் நிலையம் அருகே சம்பவம்: நகைக்கடைக்குள் புகுந்து அரிவாளை காட்டி 10 பவுன்நகை-பணம் கொள்ளை
x
தினத்தந்தி 24 May 2020 4:30 AM GMT (Updated: 24 May 2020 4:30 AM GMT)

திருப்பூரில் போலீஸ் நிலையம் அருகே பட்டப்பகலில் நகைக்கடையில் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி 10 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

திருப்பூர், 

திருப்பூரில் போலீஸ் நிலையம் அருகே பட்டப்பகலில் நகைக்கடையில் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி 10 பவுன் நகை, பணத்தை கொள்ளையடித்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

நகைக்கடையில் கொள்ளை

திருப்பூர் குமரன் ரோட்டில் அட்டிகா கோல்டு என்ற பெயரில் பழைய நகைகளை விலைக்கு வாங்கும் நகைக்கடை உள்ளது. இந்த கடையில் மேலாளராக தங்கராஜ் என்பவரும், ஒரு பெண் ஊழியரும் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி மாலை 4.20 மணிக்கு கடையின் மேலாளர் தங்கராஜ்(வயது 33) மற்றும் பெண் ஊழியர் பணியில் இருந்தனர்.

அப்போது ஹெல்மெட் அணிந்து ஆசாமி ஒருவர் கடைக்குள் வந்தார். அந்த ஆசாமி திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து தங்கராஜ் மற்றும் அந்த பெண் ஊழியரை மிரட்டி அங்கிருந்த நகை மற்றும் பணத்தை எடுத்து கொடுக்குமாறு கூறினார். இதனால் பயந்து போன நகைக்கடை மேலாளர் கடையில் இருந்த நகை மற்றும் பணத்தை எடுத்துக்கொடுத்தார். பின்னர் கடையில் இருந்து வெளியே சென்று இரும்பு ஷட்டரை வெளிப்புறமாக பூட்டி விட்டு தப்பி சென்று விட்டார். அதன்பிறகு தங்கராஜ் அக்கம் பக்கத்தில் உள்ள கடைக்காரர்களிடம் தொடர்பு கொண்டு விவரம் தெரிவித்து கடையில் இருந்து வெளியே வந்தார்.



போலீசில் புகார்

இது குறித்து நகைக்கடை மேலாளர் தங்கராஜ் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அந்த புகாரில், கடைக்குள் புகுந்த மர்ம ஆசாமி, 10 பவுன் நகை, ரூ.29 ஆயிரத்து 270 ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டதாக கூறியிருந்தார்.

கொள்ளை சம்பவம் நடந்த நகைக்கடையில் இருந்து 500 மீட்டர் தொலைவுக்குள் திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையம்உள்ளது. இதையடுத்து போலீசார் சம்பவம் நடந்த நகைக்கடையில் பொருத்தப்பட்டு இருந்த ரகசிய கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.

கைது

மேலும் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்களின் முன்பு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை முழுவதுமாக கைப்பற்றி கொள்ளையன் பற்றி துப்பு துலக்கினார்கள். அப்போது இந்த கொள்ளையில் ஈடுபட்டவர் திருப்பூர் காவிலிபாளையத்தை சேர்ந்த அழகுவேல் (34) என்பவர் என தெரியவந்தது.

அதன்பேரில் வடக்கு குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். மேலும் திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் உத்தரவின்பேரில் துணை கமிஷனர் பத்ரி நாராயணன் அறிவுரையின்படி, உதவி கமிஷனர் வெற்றிவேந்தன் மேற்பார்வையில் வடக்கு போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தேவராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் தங்கவேல், ஏட்டு ஜெயக்குமார், போலீசார் மணிகண்டன், ராஜசேகர், கோபிநாத் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் கொள்ளையில் ஈடுபட்ட அழகுவேலை கைது செய்தனர்.

பரபரப்பு

விசாரணையில் சம்பவத்தன்று அழகுவேல் மோட்டார் சைக்கிளில் வந்து நகைக்கடையில் புகுந்து அரிவாளை காட்டி மிரட்டி நகை, பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. மேலும் இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 15 வேலம்பாளையம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட சொர்ணபுரி ஐலேண்ட் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுவர் ஏறி குதித்து ஹெல்மெட் அணிந்து சென்று அரிவாளை காட்டி மிரட்டி பெண்ணிடம் 10¾ பவுன் நகையை கொள்ளையடித்த சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

ஏற்கனவே கொள்ளையடித்த நகையை அழகுவேல் கடந்த மார்ச் மாதம் அட்டிகா கோல்டு நகைக்கடையில் விற்று பணத்தை பெற்றுள்ளார். அப்போது கடையை நோட்டமிட்ட அழகுவேல், ஊரடங்குகாலத்தில் ஆட்கள் நடமாட்டம் குறைவாக இருக்கும் நேரத்தில் பட்டப்பகலில் இந்த துணிகர கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து 20¾ பவுன்நகை, ரூ.14 ஆயிரம் மற்றும் கொள்ளைக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த துணிகர கொள்ளை சம்பவத்தால் திருப்பூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story