காரைக்கால்-திருவாரூர் இடையே மின்சார ரெயில் சோதனை ஓட்டம்


காரைக்கால்-திருவாரூர் இடையே மின்சார ரெயில் சோதனை ஓட்டம்
x
தினத்தந்தி 24 May 2020 4:57 AM GMT (Updated: 24 May 2020 4:57 AM GMT)

காரைக்கால்-திருவாரூர் இடையே மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.

திருவாரூர், 

காரைக்கால்-திருவாரூர் இடையே மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.

மின்சார ரெயில் பாதை

திருச்சியில் இருந்து காரைக்கால் வரையிலான ரெயில் பாதையை மின்சார ரெயில் பாதையாக மாற்றம் செய்ய ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இதனை தொடர்ந்து மின்மயமாக்கும் பணிகள் தொடங்கப்பட்டது. திருச்சி-தஞ்சை இடையே 2 வழித்தடத்திலும் மின் பாதை அமைக்கப்பட்டது.

இதையடுத்து தஞ்சை-திருவாரூர் வரையிலான 55 கிலோ மீட்டர் ஒரு வழி ரெயில் பாதையை மின்மயமாக்கும் பணிகள் நடந்தன. இந்த பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம் மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடந்தது.

காரைக்கால்-திருவாரூர்

காரைக்கால்-திருவாரூர் வரையிலான 47 கிலோ மீட்டர் ஒரு வழிப்பாதையை மின் மயமாக்கும் பணிகள் நடந்து வந்தது. இந்த பணிகளும் நிறைவடைந்து விட்டது. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ரெயில் சோதனை ஓட்டம் நடைபெறாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில் ரெயில்வே பாதுகாப்பு ஆணையம் காரைக்கால்-திருவாரூர் இடையே மின்சார ரெயில் சோதனை ஓட்டம் நடத்த திட்டமிட்டது. அதன்படி நேற்று சென்னையில் இருந்து திருவாரூருக்கு சோதனை ரெயில் வந்தடைந்தது.

75 கிலோ மீட்டர் வேகத்தில்...

நேற்று காலை 8.20 மணிக்கு டீசல் என்ஜின் பொருத்தப்பட்ட சோதனை ரெயில் திருவாரூரில் இருந்து புறப்பட்டு காரைக்கால் சென்றடைந்தது. அப்போது ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் தலைமையில் அதிகாரிகள் மின்பாதை, ரெயில் நிலையங்களை ஆய்வு செய்தனர்.

மதியம் 2.30 மணிக்கு காரைக்கால் ரெயில் நிலையத்தில் இருந்து மின்சார என்ஜின் பொருத்தப்பட்ட சோதனை ரெயில் புறப்பட்டது. அந்த ரெயில் 75 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்பட்டது.

குறைபாடு கண்டுபிடிப்பு

ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன், கோட்ட மேலாளர் அஜய்குமார், இயக்க மேலாளர் பூபதிராஜா மற்றும் அதிகாரிகள் சோதனை ரெயிலில் பயணம் செய்தனர். அப்போது பயணிகளின் பாதுகாப்பு தன்மை குறித்து உறுதி செய்யப்பட்டு, வேறு எதுவும் பணிகள் உள்ளதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சோதனை ரெயில் 3.17-க்கு திருவாரூர் வந்தடைந்தது.

ஆய்வுக்கு பின்னர் ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் மனோகரன் கூறுகையில், ‘காரைக்கால்-திருவாரூர் வரையிலான மின் பாதையில் மின்சார ரெயில் மூலம் சோதனை நடத்தப்பட்டது. 75 கிலோ மீட்டர் வேகத்தில் ரெயில் இயக்கப்பட்ட நிலையில் மின் பாதையில் சிறு குறைபாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை உடனடியாக சரி செய்ய நடவடிக்்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் மின்சார ரெயில் இயக்க பாதுகாப்பு ஆணையத்தின் மூலம் பரிந்துரை செய்யப்படும்” என்றார்.

Next Story