மயிலாடுதுறையில் குளம்போல் தேங்கி நிற்கும் பாதாளசாக்கடை கழிவுநீரால் துர்நாற்றம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


மயிலாடுதுறையில் குளம்போல் தேங்கி நிற்கும் பாதாளசாக்கடை கழிவுநீரால் துர்நாற்றம் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 24 May 2020 10:46 AM IST (Updated: 24 May 2020 10:46 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறையில், பாதாளசாக்கடை ஆள்நுழைவு தொட்டி வழியாக வெளியேறும் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது.

குத்தாலம், 

மயிலாடுதுறையில், பாதாளசாக்கடை ஆள்நுழைவு தொட்டி வழியாக வெளியேறும் கழிவுநீர் குளம்போல் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பாதாள சாக்கடை

மயிலாடுதுறையில் நகரில் கடந்த 15 ஆண்டுகளாக பாதாளசாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின்படி நகரில் சேகரிக்கப்படும் கழிவுநீர் அனைத்தும் பிரதான குழாய்கள் வழியாக மன்னம்பந்தலில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லப்படுகின்றன. கழிவுநீர் தடையின்றி செல்வதற்காக 10 இடங்களில் கழிவு நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு குறிப்பிட்ட சில மணி நேரங்களுக்கு ஒருமுறை பம்பிங் செய்யப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த 2 ஆண்டுகளாக சில கழிவுநீரேற்று நிலையங்கள் சரிவர செயல்படாததாலும், தரமற்ற குழாய்கள் மற்றும் ஆழ்நுழைவு தொட்டிகள் அமைந்துள்ளதாலும் ஆங்காங்கே உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் சாலைகளில் தேங்கி நிற்கின்றன. மேலும் பல இடங்களில் பாதாளசாக்கடை குழாய் உடைப்பு ஏற்பட்டு, மண் சரிந்து சாலை உள்வாங்கி பள்ளம் ஏற்படுவது தொடர்கதையாக இருந்து வருகிறது. இதுகுறித்து அரசு சார்பில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு நேரில் வந்து பார்வையிட்டும் சென்றுள்ளனர். ஆனாலும் தற்போது இந்த பாதாள சாக்கடை திட்டம் சீரமைக்கப்படாமல் ஆங்காங்கே ஆள்நுழைவு தொட்டிகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி வருகின்றன.

தேங்கி நிற்கும் கழிவுநீர்

மயிலாடுதுறை காமராஜர் சாலையில் புனுகீஸ்வரர் கோவில் வடக்கு வீதி சந்திப்பில் ஆள்நுழைவு தொட்டியில் இருந்து கழிவுநீர் வெளியேறுவதால் சாலை முழுவதும் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. அந்த வழியாக கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது தேங்கி நிற்கும் கழிவுநீரை அருகில் நடந்து மற்றும் மோட்டார் சைக்கிளில் செல்வோர் மீது வாரி இரைக்கிறது.

பாதாளசாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக அந்தபகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, ஆள்நுழைவு தொட்டியில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனே சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story