நாகை கலெக்டர் அலுவலகத்தில் குறுவை சாகுபடி முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் விவசாயிகள் பங்கேற்பு


நாகை கலெக்டர் அலுவலகத்தில் குறுவை சாகுபடி முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் விவசாயிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 24 May 2020 5:27 AM GMT (Updated: 24 May 2020 5:27 AM GMT)

நாகை கலெக்டர் அலுவலகத்தில் குறுவை சாகுபடி முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

நாகப்பட்டினம், 

நாகை கலெக்டர் அலுவலகத்தில் குறுவை சாகுபடி முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் கலந்துகொண்டனர்.

ஆய்வு கூட்டம்

நாகை கலெக்டர் அலுவலகத்தில் குறுவை சாகுபடி முன்னேற்பாடு ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பிரவீன் நாயர் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் பன்னீர்செல்வம், கூடுதல் கலெக்டர் பிரசாந்த், மாவட்ட வருவாய் அலுவலர் இந்துமதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் விவசாயிகள் கலந்துகொண்டு பேசினர். அதன் விவரம் வருமாறு:-

ஸ்ரீதரன்: மத்திய, மாநில அரசுகள் அறிவித்திருக்கும் விவசாய கடன் வட்டி சலுகை ஏமாற்றம் தருகிறது. விவசாயிகள் பெற்ற கூட்டுறவு கடன்களை வருகிற 31-ந்தேதிக்குள் செலுத்த வேண்டும். இதனை விவசாயிகளால் எவ்வாறு செலுத்த முடியும். எனவே வருகிற ஆகஸ்டு 31-ந்தேதி வரை வட்டி வசூல் செய்யக்கூடாது என்று உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அதிகளவில் புழக்கத்தில் உள்ள போலி விதை நெல்லை அகற்றி விட்டு, தரமான விதை நெல்லை வழங்க வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரானது ஒரு வாரத்துக்குள் கடைமடை பகுதியான நாகைக்கு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 30 நாட்கள் வரை முறையில்லாமல் வினாடிக்கு 20 ஆயிரம் கன அடிக்கு குறையாமல் தண்ணீர் திறக்க வேண்டும்.

புதிய கடன்கள்

சரபோஜி: கொரோனா வைரஸ் எதிரொலியால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழந்து நிற்கின்றனர். எனவே அனைத்து விவசாய கடன் களையும் தள்ளுபடி செய்து, புதிய கடன்கள் வழங்க வேண்டும். தெலுங்கானா மாநிலத்தில் விவசாயிகளுக்கு முன் தொகை ரூ.5 ஆயிரம் வழங்குவது போல் தமிழகத்திலும் வழங்க வேண்டும். நாகை-செல்லூர்- தேமங்கலம் சாலை அமைக்கும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்.

பிரபாகரன்: குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் இருந்து மே மாதம் இறுதி அல்லது ஜூன் மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறக்க வேண்டும். குறுவை சாகுபடியை டெல்டா கடைமடை பகுதிகளில் தீவிரப்படுத்த வேளாண்மைத்துறை அதிகாரிகள் மூலம் தக்க ஆலோசனைகளை விவசாயிகளுக்கு வழங்கவேண்டும்.

இவ்வாறு விவசாயிகள் பேசினர்.

Next Story