தூத்துக்குடியில் ரூ.30 கோடி மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம் - கலெக்டர் சந்தீப் நந்தூரி தகவல்
தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.30 கோடி மானியத்தில் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டத்தில் 2020-21-ம் நிதியாண்டில் 4 ஆயிரத்து 315 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.30 கோடி மானியத்தில் நுண்ணீர் பாசனத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. நீராதாரம், மழைப்பொழிவு நாளுக்கு நாள் குறைந்து வருவதால், இருக்கும் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்யும் நோக்கில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியத்தில் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன கருவிகள் வழங்கப்பட உள்ளன.
சிறு, குறு விவசாயிகள் குறைந்தபட்சம் 0.40 ஹெக்்டேர் முதல் அதிகபட்சமாக 2 ஹெக்டேர் வரை உள்ளவர்கள் பயனடையலாம். இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மானியத்தில் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன கருவிகள் வழங்கப்பட உள்ளன.
மேலும் நுண்ணீர் பாசனத் திட்டத்தை செயல்படுத்தும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், பிரதமரின் நுண்ணீர் பாசனத் திட்டத்தின் கீழ், துணை நீர் மேலாண்மை நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த திட்டத்தில் நுண்ணீர் பாசனத் திட்டத்தின்கீழ் பதிவு செய்யும் விவசாயிகளுக்கு பாசனம் செய்ய ஏதுவாக டீசல் மோட்டார் அல்லது மின் மோட்டார்கள், இணைப்பு குழாய்கள், ஆழ்துளை கிணறுகள் மற்றும் தரைமட்ட நீர் சேமிப்பு கட்டமைப்பு அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
எனவே நுண்ணீர் பாசனத்தில் பதிவு செய்யும் விவசாயிகள் துணை நீர் மேலாண்மை சிறப்பு திட்டத்திலும் பதிவு செய்து பயனடையலாம். இந்த திட்டத்தில் பங்கேற்க விரும்பும் விவசாயிகள் தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப் பயிர்களை அடங்கலில் பதிவு செய்வதுடன், குடும்ப அட்டை நகல், அடங்கல், கணினி சிட்டா, நில வரைபடம், சிறு, குறு விவசாயிகளாக இருப்பின் இதற்காக தாசில்தாரிடம் இருந்து பெறப்பட்ட சான்று ஆகிய ஆவணங்களுடன் அருகில் இருக்கும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகி பயனடையலாம்.
இந்த திட்டத்தின் மூலம் காய்கறி பயிர்கள், பழப்பயிர்கள் போன்ற தோட்டக்கலைப் பயிர்களை சாகுபடி செய்யும் விவசாயிகளும் பயனடையலாம். எனவே தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story