கொரோனா வந்துவிடக்கூடாது என்பதற்காக விஷ மருந்தை குடித்து மகன் சாவு தொழில் அதிபருக்கு தீவிர சிகிச்சை


கொரோனா வந்துவிடக்கூடாது என்பதற்காக விஷ மருந்தை குடித்து மகன் சாவு தொழில் அதிபருக்கு தீவிர சிகிச்சை
x
தினத்தந்தி 24 May 2020 10:00 PM GMT (Updated: 24 May 2020 7:08 PM GMT)

சிர்சி தாலுகாவில், கொரோனா வந்துவிடக்கூடாது என்பதற்காக விஷத்தன்மை கொண்ட மருந்தை ஒரு தொழில் அதிபரும், அவருடைய மகனும் குடித்தனர்.

பெங்களூரு,

சிர்சி தாலுகாவில், கொரோனா வந்துவிடக்கூடாது என்பதற்காக விஷத்தன்மை கொண்ட மருந்தை ஒரு தொழில் அதிபரும், அவருடைய மகனும் குடித்தனர். இதில் மகன் பலியானார். அந்த தொழில் அதிபருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உத்தர கன்னடா மாவட்டம் சிர்சி தாலுகா ராமனபைலு கிராமத்தைச் சேர்ந்தவர் நெக்சன் அந்தோணி(வயது 70). தொழில் அதிபர். இவரது மகன் பிரான்சிஸ் ரேகோ(42). இவர்கள் இருவரும் கடந்த சில நாட்களாக இருமல் மற்றும் உடல்சோர்வால் அவதிப்பட்டு வந்தனர். இதனால் இவர்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று அச்சமடைந்தனர்.

மேலும் இதுபற்றி அவர்கள் யாரிடமும் சொல்லவில்லை. மாறாக விஷத்தன்மை கொண்ட மருந்தை குடித்தால் தங்களை கொரோனா தாக்காது என்று கருதினர். அதன்பேரில் நேற்று முன் தினம் நெக்சனும், அவரது மகன் பிரான்சிசும் வீட்டில் இருந்த விஷத்தன்மை கொண்ட மருந்தை குடித்தனர்.

இதனால் சிறிது நேரத்தில் 2 பேரும் மயங்கி விழுந்தனர். அவர்கள் 2 பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களிடம் டாக்டர்கள் நடத்திய விசாரணையில் அவர்கள் இருவரும் தங்களுக்கு கொரோனா வந்துவிடக்கூடாது என்று நினைத்து விஷத்தன்மை கொண்ட மருந்தை குடித்தது தெரிய வந்தது.

இதையடுத்து அவர்கள் 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பிரான்சிஸ் பலியானார். நெக்சனுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து சிர்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story