சென்னையில், முககவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் 10 ஆயிரம் பேர் மீது வழக்கு


சென்னையில், முககவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் 10 ஆயிரம் பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 24 May 2020 11:30 PM GMT (Updated: 24 May 2020 7:30 PM GMT)

சென்னையில் முககவசம் அணியாமல் சென்ற வாகன ஓட்டிகள் 10 ஆயிரம் பேர் மீது வழக்குகள் போடப்பட்டு உள்ளதாக போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.

சென்னை, 

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதான நுழைவு வாயிலில், ஆயுதப்படை காவலர்களின் பயன்பாட்டுக்காக, கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக தானியங்கி கைகழுவும் எந்திரம் வைக்கப்பட்டுள்ளது. அந்த எந்திரத்தின் செயல்பாட்டை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. காவலர் குடியிருப்புகளில் கபசுர குடிநீர் கொடுக்கப்படுகிறது. முககவசங்கள் வழங்கப்படுகிறது. முககவசம் கட்டாயம் அணிய வேண்டும். இதை வலியுறுத்தும் வகையில் முக கவசம் அணியாமல் வாகனம் ஓட்டிச்செல்பவர்கள் மீது தினமும் வழக்கு போடப்படுகிறது.

கடந்த 3 நாட்களில் மட்டும் முககவசம் அணியாமல் வாகனங்களில் சென்ற 10 ஆயிரம் பேர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. சென்னையில் ஊரடங்கு கால கட்டத்தில் குற்றங்களின் எண்ணிக்கை பாதியாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த பாதிப்பை தடுக்க தமிழகம் முழுவதும் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் ஏற்கனவே உள்ள தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு மே மாதம் 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள 25 மாவட்டங்களில் மேலும் கூடுதல் தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஊரடங்கு அமலுக்கு வந்ததில் இருந்து நேற்று பகல் நிலவரப்படி கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 22 ஆயிரமாக உயர்ந்தது.

4 லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அந்த வாகன ஓட்டுனர்களிடம் இருந்து ரூ.7.42 கோடி அபராத தொகை வசூலிக்கப்பட்டது.

Next Story