தாம்பரத்தில் அரிசி வியாபாரி குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா
தாம்பரத்தில் அரிசி வியாபாரி குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதியானது.
தாம்பரம்,
சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த 47 வயது அரிசி வியாபாரி, அவருடைய 19 வயது மகன், 13 வயது மகள் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு நேற்று கொரோனா பாதிப்பு உறுதியானது.
மேற்கு தாம்பரம் அண்ணா தெருவைச் சேர்ந்த 40 வயது ஆண், சாமியார் தோட்டம் பகுதியை சேர்ந்த 49 வயது ஆண், கிழக்கு தாம்பரம் மகாலட்சுமி தெருவைச் சேர்ந்த அரசு ஆஸ்பத்திரி ஊழியரின் 48 வயது மகன், கிழக்கு தாம்பரம் ஆல் பொன்னுசாமி தெருவைச் சேர்ந்த 74 வயது முதியவர் என தாம்பரம் நகராட்சி பகுதியில் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பல்லாவரம் நகராட்சி பகுதியில் 6 பேருக்கும், திரிசூலம், பீர்க்கன்காரணை, பம்மல், பொழிச்சலூர், நாகல்கேணி பகுதிகளில் தலா ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.
மண்ணிவாக்கம்
செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள வேதகிரி நகரில் வசிக்கும் 9 மாத பெண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த குழந்தையின் பெற்றோருக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. கூடுவாஞ்சேரி ராதாகிருஷ்ணன் சாலை பகுதியைச் சேர்ந்த 38 வயது ஆணுக்கு கொரோனா உறுதியானதால் அவரது குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களுக்கும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கும் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்தனர்.
மண்ணிவாக்கம் ராம்நகர் பகுதியில் 28 வயது வாலிபருக்கும், மண்ணிவாக்கம் மேட்டு தெருவில் 30 வயது லேப் டெக்னீசியன் ஒருவருக்கும் கொரோனா வைரஸ் உறுதியானதை தொடர்ந்து அவர்களது குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் பரிசோதனை செய்யப்பட்டது.
இவர்கள் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 46 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 779 ஆனது. இவர்களில் 253 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 7 பேர் உயிரிழந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாங்காடு
மாங்காடு அடுத்த பட்டூர் பகுதியை சேர்ந்த ஒருவர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதையடுத்து அவருடைய மனைவி, மகன், மகள், மருமகள் ஆகியோரது ரத்த மாதிரிகள் பரிசோதனை செய்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அவர்கள் 4 பேருக்கும் நேற்று கொரோனா உறுதியானது. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது அந்த பகுதி மக்கள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.
இவர்கள் உள்பட காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 21 பேருக்கு கொரோனா உறுதியானது. மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 285 ஆனது. இவர்களில் 152 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். ஒருவர் உயிரிழந்தார். 132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மாவட்டம் முழுவதும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 731 ஆனது. இவர்களில் 270 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 9 பேர் உயிரிழந்தனர். 452 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Related Tags :
Next Story