60 நாட்களுக்கு பிறகு சலூன் கடைகள் திறப்பு திருப்பூரில் அழகு நிலையங்களுக்கு இளம்பெண்கள் படையெடுப்பு
திருப்பூரில் 60 நாட்களுக்கு பிறகு சலூன் கடைகள் நேற்று திறக்கப்பட்டன. அழகு நிலையங்களுக்கு இளம்பெண்கள் படையெடுத்தனர்.
அனுப்பர்பாளையம்,
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து திருப்பூரில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களும், கடைகளும் மூடப்பட்டன. இதையொட்டி சலூன் கடைகளும் தொடர்ந்து மூடப்பட்டதால் பெரும்பாலான ஆண்கள் நீண்ட தாடியுடனும், முடி வெட்ட முடியாமல் தலையில் அதிக முடியுடனும் சுற்றி வந்தனர்.
தற்போது திருப்பூர் மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாகவும், பச்சை மண்டலமாகவும் மாறி உள்ளதால் ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது. இதனால் திருப்பூரில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டு, பொதுமக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கி உள்ளனர். ஆனாலும் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதால் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் கடை உரிமையாளர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.
சலூன் கடைகள் திறப்பு
இதையடுத்து கடந்த 19-ந்தேதி முதல் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகள் தவிர ஊரக பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. இந்த நிலையில் நேற்று முதல் சென்னை தவிர அனைத்து மாவட்டங்களிலும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை திறக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.
இதை தொடர்ந்து 60 நாட்களுக்கு பிறகு நேற்று திருப்பூர் மாநகர பகுதிகளில் உள்ள அனைத்து சலூன் கடைகளும், அழகு நிலையங்களும் திறக்கப்பட்டன. நேற்று காலை 7 மணி முதலே சலூன் கடைகளில் வாடிக்கையாளர்கள் அதிக அளவில் வரத்தொடங்கினர். முதல் நாள் என்பதால் உரிமையாளர்கள் கடைகளை திறந்து முதலில் சுத்தம் செய்தனர். பின்னர் அரசு அறிவித்தபடி கிருமி நாசினி தெளிப்பதையும், வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்து வருவதையும் உறுதிப்படுத்தினார்கள்.
இளம்பெண்கள் படையெடுப்பு
இதேபோல் திருப்பூரில் உள்ள அழகு நிலையங்களுக்கும் இளம்பெண்கள் படையெடுக்க தொடங்கினார்கள். திருப்பூர் பி.என்.ரோடு கணக்கம்பாளையம் பிரிவு, புதிய பஸ் நிலையம் காட்டன்மில் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அழகு நிலையங்களுக்கு வந்த இளம்பெண்களை உரிமையாளர்கள் ரோஜாப்பூ, இனிப்பு கொடுத்து உற்சாகமாக வரவேற்றனர்.
திருப்பூரில் 60 நாட்களுக்கு பிறகு சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதால் அதன் உரிமையாளர்களும், வாடிக்கையாளர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story