நகர்புற பகுதிகளில் சலூன், அழகு நிலையங்கள் திறப்பு


நகர்புற பகுதிகளில் சலூன், அழகு நிலையங்கள் திறப்பு
x
தினத்தந்தி 24 May 2020 11:45 PM GMT (Updated: 24 May 2020 11:45 PM GMT)

நகர்புற பகுதிகளில் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன.

கோவை,

கொரோனாவில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதியில் இருந்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது 4-ம் கட்டமாக ஊரடங்கு நீடிக்கிறது. தொழில்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்க்கையில் இயல்பு நிலை திரும்ப பல்வேறு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அதிலும் குறிப்பாக சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் (பியூட்டிபார்லர்) மூடப்பட்டு இருந்தது. இதனால் முடிதிருத்தம் செய்வது, அழகுபடுத்திக் கொள்வது போன்றவற்றை செய்ய முடியாமல் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து குளிர்சாதன வசதி (ஏ.சி.) இல்லாத கடைகள் தவிர பிற கடைகள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஆனால் சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் மட்டும் திறக்க அரசு அனுமதி அளிக்காமல் இருந்தது. இதன் காரணமாக சலூன் கடை தொழிலாளர்கள், அழகு நிலைய பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது.

அரசு அனுமதி

இந்தநிலையில் தமிழகத்தில் உள்ள கிராமப்புறங்களில் மட்டும் கடந்த 19-ந் தேதியில் இருந்து சலூன் கடைகள், அழகுநிலையங்கள் திறக்க அரசு அனுமதி வழங்கியது. எனவே மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்புற பகுதிகளிலும் உள்ள சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்களை திறக்க அனுமதி வழங்க வேண்டும் என்று தொழிலாளர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

அதை பரிசீலித்து சென்னை தவிர, இதர மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் முடிதிருத்தம் மற்றும் அழகு நிலையங்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை செயல்படலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. மேலும் அந்த கடைகளில் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து அரசு அறிவுறுத்தியது.

பூஜை செய்தனர்

அதன்படி கோவை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் நேற்று சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்கப்பட்டன. அரசு விதித்த கட்டுப்பாடுகளின்படி முடிதிருத்துபவர் மற்றும் வாடிக்கையாளர்கள் முககவசம் அணிந்து இருந்தனர். ஒருவருக்கு முடிதிருத்திய பிறகு இருக்கை மீது கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. முடிதிருத்த வரும் போதும், செல்லும் போதும் கைகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், நீண்ட நாட்களுக்கு பிறகு சலூன்கடைகள் திறக்கப்பட்டதாலும் கூட்டம் அதிகமாக இருந்தது. அப்போது அவர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்து காத்திருந்தனர். இது போல் அழகு நிலைய உரிமையாளர்களும் நேற்று காலையிலேயே கடைகளை திறந்து சுத்தம் செய்தனர். பின்னர் அழகு நிலைய உபகரணங்கள் மீது கிருமி நாசினி தெளித்தனர். அழகு நிலைய கடை முன்பு, மஞ்சள்நீர் தெளித்து, கோலமிட்டனர். கோவை நியூசித்தாபுதூர் பகுதியில் உள்ள ஒரு அழகு நிலையம் உள்பட அழகு நிலையங்களில் உரிமையாளர்கள் பூஜை செய்து, கற்பூரம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

நீண்ட நாட்களுக்கு பிறகு சலூன் கடைகள் மற்றும் அழகு நிலையங்கள் திறக்கப்பட்டதால் உரிமையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் இதுவரை தலைமுடி வளர்த்து, தாடியுடன் இருந்தவர்களை சலூன் கடைகளில் காண முடிந்தது.

Next Story