மாவட்ட செய்திகள்

தனிமைப்படுத்தப்பட்ட காந்தல் பகுதியில் 500 குடும்பங்களுக்கு முகக்கவசம் நகராட்சி கமிஷனர் வழங்கினார் + "||" + Facial Mask for 500 families

தனிமைப்படுத்தப்பட்ட காந்தல் பகுதியில் 500 குடும்பங்களுக்கு முகக்கவசம் நகராட்சி கமிஷனர் வழங்கினார்

தனிமைப்படுத்தப்பட்ட காந்தல் பகுதியில் 500 குடும்பங்களுக்கு முகக்கவசம் நகராட்சி கமிஷனர் வழங்கினார்
தனிமைப்படுத்தப்பட்ட காந்தல் பகுதியில் 500 குடும்பங்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினியை நகராட்சி கமிஷனர் சரஸ்வதி வழங்கினார்.
ஊட்டி,

டெல்லி மாநாட்டுக்கு சென்று நீலகிரி மாவட்டத்துக்கு திரும்பிய 7 பேர், அவர்களுடன் தொடர்பில் இருந்த 2 பேர் என 9 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தனர். மேலும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டு சென்று வந்த லாரி டிரைவர்கள் 4 பேர் மற்றும் ஒருவரது சகோதரி என 5 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இதில் 4 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒருவர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கிடையே சென்னையில் இருந்து ஊட்டிக்கு வந்த 8 மாத கர்ப்பிணிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் வசித்து வந்த காந்தலில் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள நடைபாதைகள் தடுப்புகள் வைத்து மூடப்பட்டு உள்ளது. போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. அப்பகுதி தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு உள்ளதுடன், வெளியாட்கள் உள்ளே வர அனுமதி இல்லை. தனிமைப்படுத்தப்பட்ட அந்த பகுதியில் 500 வீடுகள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

முகக்கவசம், கிருமி நாசினி

அங்கு ஊட்டி நகராட்சி கமிஷனர் சரஸ்வதி வீடு, வீடாக சென்று அனைத்து குடும்பங்களுக்கும் முகக்கவசம், 250 கிராம் பிளச்சிங் பவுடர், கிருமி நாசினியை வழங்கி சமூக இடைவெளியை கடைபிடிப்பதோடு, கை கழுவும் முறை குறித்து விளக்கினார். குடும்ப உறுப்பினர்கள் எத்தனை பேர் உள்ளார்களோ அனைவருக்கும் முகக்கவசம் வழங்கப்பட்டது. அப்போது சுகாதார அதிகாரி(பொறுப்பு) பாஸ்கர் உடனிருந்தார். பின்னர் கமிஷனர் கிருமிநாசினி தெளிக்கும் பணியை பார்வையிட்டார்.

நோய் எதிர்ப்பு சக்தி

நகராட்சி மூலம் தினமும் 3 முறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர், வைட்டமின் சி மற்றும் ஜிங்க் மாத்திரைகள் மக்களுக்கு வழங்கப்பட்டன. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் குறித்து அரசு துறைகளுக்கு தெரிவிக்கும் வகையில் தன்னார்வலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் காய்கறிகள், மளிகை பொருட்கள் வீடு, வீடாக வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. காந்தலில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் 200 பேரிடம் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத்திணறல் இருக்கிறதா, கர்ப்பிணிகள் எத்தனை பேர் உள்ளனர், சர்க்கரை நோயாளிகள் போன்ற விவரங்களை கேட்டு சுகாதாரத்துறையினர் ஆய்வு நடத்தி வருகின்றனர்.