நீலகிரி மாவட்டத்தில் நகர்புற பகுதிகளில் சலூன் கடைகள் திறப்பு


நீலகிரி மாவட்டத்தில்   நகர்புற பகுதிகளில் சலூன் கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 25 May 2020 1:21 AM GMT (Updated: 25 May 2020 1:21 AM GMT)

நீலகிரி மாவட்டத்தில் நகர்புற பகுதிகளில் சலூன் கடைகள் திறக்கப்பட்டன.

ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதனால் நீலகிரி மாவட்டத்தில் அனைத்து சலூன் கடைகளும் மூடப்பட்டன. இதனால் முடி திருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டது. சலூன் கடைகளை வைத்து வாழ்க்கையை நடத்தி வரும் அவர்கள் வருமானம் இல்லாமல் தவித்தனர்.

இதனால் சலூன் கடை மற்றும் வீட்டு வாடகை செலுத்த முடியாமல் அவதி அடைந்தனர். இதற்காக கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். மேலும் ஆண்கள் முடிவெட்ட முடியாமலும், முகச்சவரம் செய்ய இயலாமலும், சிலர் ‘டை’ அடிக்க முடியாமலும் திண்டாடி வந்தனர். இதையடுத்து கடந்த 19-ந் தேதி முதல் ஊரக பகுதிகளில் சலூன் கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டது.

சலூன் கடைகளுக்கு அனுமதி

இதனால் தடை செய்யப்பட்ட பகுதிகளை தவிர மற்ற இடங்களில் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதையடுத்து சென்னை தவிர மற்ற மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்தது.

அதனை தொடர்ந்து நேற்று முதல் நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கூடலூர், நெல்லியாளம் ஆகிய 4 நகராட்சிகள், 11 பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகள் திறந்து செயல்பட்டன. ஊட்டியில் 200-க்கும் மேற்பட்ட சலூன் கடைகள் திறக்கப்பட்டது. கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடித்து முகச்சவரம், முடிதிருத்தம் செய்யப்பட்டது. இதற்காக நடுவில் இருந்த இருக்கைகள் காலியாக விடப்பட்டன. கடைகளுக்குள் கூட்டம் கூடாமல் இருக்க 2 முதல் 4 நபர்களே அனுமதிக்கப்பட்டனர்.

முகக்கவசம் அணிந்து...

மற்றவர்கள் வந்தால் சிறிது நேரம் கழித்து வரவும் அல்லது வெளியே காத்திருக்கவும் கூறினர். சலூன் கடைகளில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் முகக்கவசம் அணிந்து இருந்தனர். அங்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கிருமிநாசினி வழங்கப்பட்டதுடன், கடைகளுக்குள் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது. கொரோனா அறிகுறி தென்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் சலூன் கடைகள் திறக்கப்படவில்லை. தற்போது ஊரகம், நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் சலூன் கடைகள் திறந்து செயல்பட்டு வருவதால், பல நாட்களாக முடி வெட்டாமல் இருந்த ஆண்கள் முடிதிருத்த சலூன் கடைகளுக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

Next Story