பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்
திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்களை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வழங்கினார்.
திண்டுக்கல்,
திண்டுக்கல் குள்ளனம்பட்டி, மேட்டுப்பட்டி ஆகிய பகுதிகளில் மும்மதங்களை சேர்ந்த பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இதில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு அரிசி, அனைத்து வகையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகளை வழங்கினார்.
இந்த 2 நிகழ்ச்சிகளிலும் மொத்தம் 1,500 பேருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், அபிராமி கூட்டுறவு சங்க தலைவர் பாரதிமுருகன், துணை தலைவர் ராஜன், நாட்டாண்மை காஜாமைதீன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக, ஈகை திருநாளான ரம்ஜான் பண்டிகையை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் வாழ்த்து தெரிவித்தார். கொரோனா விஷக்கிருமி விரைவில் விலகிடவும், நாட்டு மக்கள் மன நிம்மதியோடும், அமைதியோடும் பூரண நலத்தோடும் வாழ்ந்திடவும், நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, சகோதரத்துவம் ஆகியவை பெருகவும், நாட்டில் அமைதி, வளம் ஆகியவை அதிகரித்து மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் ரம்ஜான் பண்டிகையில் வாழ்த்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story