கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியவர் மீது தாக்குதல் போலீசார் விசாரணை
கொரோனாவில் இருந்து மீண்டு வீட்டுக்கு வந்த வாலிபர் மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மதுரை,
மதுரை கூடல்புதூர் பகுதியில் 37 வயது மதிக்கத்தக்க ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். அவரை தொடர்ந்து அவரது மனைவி, குழந்தைக்கும் நோய் தொற்று ஏற்பட்டதால் அவர்களும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் நோய் குணமாகி அவர் மட்டும் நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினார். அப்போது வீட்டின் உரிமையாளருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் அந்த நபர் தாக்கப்பட்டு மீண்டும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குற்றச்சாட்டு
இது குறித்து அவர் கூறுகையில், “நான் வீடு திரும்பியபோது வீட்டின் உரிமையாளர் மற்றும் அங்கிருந்தவர்கள் என்னை பார்த்து உங்களால் தான் இந்த பகுதியில் கொரோனா பரவியது என்று ஏளனமாக பேசினார்கள். இது குறித்த கேட்ட என்னை அங்கிருந்த 3 பேர் சேர்ந்து தாக்கினர். அதில் காயம் அடைந்த என்னை அருகில் இருந்தவர்கள் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்” என்றார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் கூடல்புதூர் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பாதிக்கப்பட்ட நபர் மது போதையில் வீட்டிற்கு வந்த போது தகராறு ஏற்பட்டதாகவும், அதில் இரு தரப்பினரும் மோதி கொண்டதாகவும் போலீசார் தெரிவித்தனர். எனினும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story