கொரோனா தாக்கத்தால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு போதிய நிதி கிடைக்குமா? சாலை பணி இறுதிகட்டத்தை எட்டியது


கொரோனா தாக்கத்தால்  மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு போதிய நிதி கிடைக்குமா?  சாலை பணி இறுதிகட்டத்தை எட்டியது
x
தினத்தந்தி 25 May 2020 3:59 AM GMT (Updated: 25 May 2020 3:59 AM GMT)

கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்துக்கு போதிய நிதி கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அதே நேரத்தில் அங்கு அமையும் சாலைக்கான பணி இறுதிகட்டத்தை எட்டியது.

திருப்பரங்குன்றம்,

மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்கு உட்பட்ட தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் 199.24 ஏக்கர் பரப்பளவில் ரூ.1,264 கோடியில் உலகத்தரம் வாய்ந்த உயர்தர சிகிச்சை கொண்ட எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது. இதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு, ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் நிதி ஒதுக்கியபாடில்லை.

ஆகவே கட்டுமான பணி தொடங்கப்படாத நிலையே உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்கப்படுவது எப்போது என்று தமிழக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்த நிலையில் கொரோனா ஏற்படுத்திய தாக்கத்தால் நிதி ஒதுக்கீடு நடவடிக்கைகள் மேலும் தள்ளிப்போகுமோ? என்ற அச்சம் ஒரு புறம் உள்ளது.

ரூ.21 கோடியில் சாலை

இந்த நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்காக மத்திய சாலை திட்டத்தின் கீழ் ரூ.21.20 கோடியில் ஆஸ்டின்பட்டி முதல் கரடிக்கல் வரை சாலை வசதி செய்யப்பட்டு வருகிறது. அதில் கிராம சாலையாக இருந்து வந்த 20 அடி ரோடு 60 அடியாக அகலப்படுத்தப்பட்டு விரிவான சாலையாக தயாராகி வருகிறது.

கடந்த 2019 ஜூன் மாதம் இறுதியில் இந்த பணி தொடங்கப்பட்டது. 6 மாதங்களில் பணிகள் முடிக்க திட்டமிடப்பட்டது. கொரோனா ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் பணிகள் மந்தமாகவே நடக்கின்றன. 11 மாதங்கள் ஆகியும் இன்னும் பணி முடிந்தபாடில்லை.

250 மீட்டர் தூரத்துக்கு இரு வழிச்சாலை ரோடு தயாராகிவிட்டது. இன்னும் 100 மீட்டர் தூரம் சாலை அமைக்க வேண்டியுள்ளது. இந்த பணியை துரிதப்படுத்தி முடிப்பதுடன், போதிய நிதி ஒதுக்கீடு செய்து மருத்துவமனை கட்டிடத்துக்கான கட்டுமான பணியை தொடங்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.

Next Story