கெங்கவல்லியில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு திருமணம்


கெங்கவல்லியில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு திருமணம்
x
தினத்தந்தி 25 May 2020 9:40 AM IST (Updated: 25 May 2020 9:40 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் கொரோனா பாதித்த பெண்ணுக்கு சமூக இடைவெளியுடன் நேற்று திருமணம் நடந்தது.

கெங்கவல்லி,

சேலம் மாவட்டம், கெங்கவல்லியை சேர்ந்த 26 வயது பெண், சென்னை, வடபழனியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் தனது பெற்றோருடன் வடபழனியில் வசித்து வந்தார். இந்த நிலையில் அந்த பெண்ணுக்கும், கெங்கவல்லியை சேர்ந்த 28 வயதான அவருடைய உறவினருக்கும் திருமணம் செய்ய கடந்த ஜனவரி மாதம் இரு குடும்பத்தினரும் நிச்சயித்தனர்.

அதன்படி அவர்களுக்கு நேற்று திருமணம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை குடும்பத்தினர் செய்து வந்தனர். இதையொட்டி கடந்த 21-ந் தேதி சென்னையில் இருந்து அந்த மணப்பெண் சொந்த ஊருக்கு தனது பெற்றோர் மற்றும் உறவினர்கள் 12 பேருடன் காரில் வந்தார். அவருக்கு தலைவாசல் நத்தக்கரை சோதனைச்சாவடி மையத்தில் பரிசோதனை செய்தனர். அதில், மணப்பெண்ணுக்கு, கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. உடனே அவரை வீட்டில் தனிமைப்படுத்தி வைத்திட மருத்துவக்குழுவினர் அறிவுறுத்தினர்.

இந்த நிலையில் திருமண நாளான நேற்று அவரது வீட்டுக்கு மருத்துவக்குழுவினர் சென்றனர். அங்கு மணப்பெண்ணுக்கு மீண்டும் பரிசோதனை செய்தனர். அவருடன் வந்த 12 பேரில் 9 பேருக்கு சோதனை செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று சமூக இடைவெளியுடன் திருமணம் நடத்த சுகாதாரத்துறையினர் அனுமதி அளித்தனர்.

அதிகாரிகளின் அனுமதியின் பேரில் வீட்டின் முன்பு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் மணமக்களின் பெற்றோர் மற்றும் வேத விற்பன்னர் ஆகியோர் மட்டும் உரிய இடைவெளியில் நின்று திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் மணமக்கள் மற்றும் உடன் இருந்தவர்கள் முக கவசம், கையுறை அணிந்து தகுந்த பாதுகாப்புடன் மண விழாவில் பங்கேற்றனர்.

இதையடுத்து மணமகன் உரிய இடைவெளியுடன் நின்று மணப்பெண் கழுத்தில் தாலி கட்டினார். வேத விற்பன்னர் மந்திரம் ஓத, எந்தவித பரபரப்பும் இன்றி 10 நிமிடங்களில் இந்த திருமணம் நடைபெற்று முடிந்தது. பின்னர் திருமணத்திற்கு அழைக்கப்பட்டிருந்த அருகில் வசிக்கும் உறவினர்கள் என 50 பேருக்கு மட்டும் உணவு பரிமாறப்பட்டது.

அதே நேரத்தில் மணமகள், மணமகன் வீட்டார் அவர்களது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்கள் யாரும், வெளியே செல்ல வேண்டாம் என மருத்துவக்குழுவினர் அறிவுறுத்தினர். மேலும் இரு குடும்பத்தினருக்கும் நோய் தடுப்பு மாத்திரைகள் வழங்கி, வீடு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், கெங்கவல்லியில் கொரோனா தொற்று உள்ள பெண்ணுக்கு திருமணம் நடைபெற்றது. புதுப்பெண் என்பதால் தற்போது அவரை வீட்டில் தனிமைப்படுத்தி, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்தனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு திருமணம் நடைபெற்ற சம்பவம் கெங்கவல்லி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story